You are currently viewing மக்களை கொல்லாமல் கொல்லும் ‘மின் அதிர்ச்சி’!

மக்களை கொல்லாமல் கொல்லும் ‘மின் அதிர்ச்சி’!

2023 ஜனவரி முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் மின் கட்டணம் செலுத்தாததால் கீழ்வரும் எண்ணிக்கையின் அடிப்படையில் மின் துண்டிப்பு இடம்பெற்றுள்ளது.  

ஜனவரி – 45029, பெப்ரவரி – 42694, மார்ச் – 58438, ஏப்ரல் – 36719, மே – 74232, ஜுன் – 89623, ஜுலை – 118481, ஆகஸ்ட் – 120474, செப்டம்பர் – 96439, ஒக்டோபர் – 106106. இந்த தரவுகள் புலப்படும் கதை என்ன?  இவ்வாறு மின் கட்டணம் தொடர்ச்சியாக அதிகரிக்கப்படுவதால் அதனை செலுத்துவதற்குரிய இயலுமையை சாதாரண மக்கள் இழந்துவருகின்றனர் என்பதும் உறுதியாகிவருகின்றது. 

இலங்கை மின்சார சபை கடந்த ஒக்டோபர் மாதம் 20 பில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ள நிலையிலேயே, மின்சார கட்டணம் 18 வீதத்தால் மீண்டும் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வருடத்துக்குள் மின் கட்டணம் மீள அதிகரிக்கபபடமாட்டாது என அரசும், துறைசார் அமைச்சரும் கூறினாலும், இன்னும் இரு மாதங்கள் இருப்பதால், என்ன நடக்கும் என்பதை இப்போதே உறுதியாக கூறிவிட முடியாது. 

இங்கு முக்கிய கதை யாதெனில், கணிப்புகளின் அடிப்படையிலேயே மின் கட்டணம் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டுவருகின்றது. ஒக்டோபர் மாதத்துக்கான கணிப்பு மற்றும் உண்மையான மின் உற்பத்தி அளவை ஒப்பிட்டுபார்த்தால், கணிப்பு அடிப்படையில் ஒக்டோபர் மாதத்தில் இலங்கை மின்சாரசபை கூடுதல் இலாபத்தை இலக்கு வைத்துள்ளது.  எதிர்காலத்தில் மின்சார சபையும்  விற்பனை செய்துவிட வேண்டுமெனில் இவ்வாறு இலாபம் காட்ட வேண்டியது அவசியமாக உள்ளது என்பது வேறுகதை. ஆனால் இதன்மூலம் சாதாரண மக்களே மென்மேலும் பாதிக்கப்படுகின்றனர். 

இலங்கை மின்சார சபையின் மதிப்பீடு – கணிப்பு சரியெனில் கடந்த ஒக்டோபர் மாதம், அந்த சபை 1303 ஜிகாவாட் மின்சாரத்தை (ஜிகாவாட் மணிநேரம்) உற்பத்தி செய்திருக்க வேண்டும். எனினும், குறித்த மாதத்தில் மின்சார சபை, 1265 ஜிகாவாட் மின்சாரத்தையே (மணிநேரம்)  உற்பத்தி செய்துள்ளது. நீர் மின் உற்பத்தி நிலையங்களில் 33 சதவீத மின்சார உற்பத்தி எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும் அதைவிட அதிகம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி 43 சதவீத மின்சாரம், நீர்மின் நிலையங்களைப் பயன்படுத்தியே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. எனவே, உத்தேச கணிப்புமூலம் மின்சார சபை பெற்றுள்ள  லாபம் பற்றியும் கவனம் செலுத்தப்பட வேண்டும். நிலக்கரியில் இயங்கும் அனல் மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு அதிக செலவு ஏற்படும். இதன்மூலம் 38 சதவீத மின் உற்பத்தி எதிர்பார்க்கப்பட்டாலும் 28 வீத உற்பத்தியே இடம்பெற்றுள்ளது.  

24% மின்சாரம் புதுப்பிக்கத்தக்க மூலாதாரங்கள் மூலம் உற்பத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த அளவு 22% எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் நீர் மின்சாரம் எவ்வளவு திறனுடன் செயல்பட்டது என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். நீர் மின்சாரம் மலிவான எரிசக்தி மூலாதாரமாக இருக்கும் நிலையில், மக்களுக்கு வழங்கப்படும் ஒரு யுனிட் மின்சாரத்தை, அனல் மின் நிலைய யுனிட்டுடன் ஒப்பிட்டு கணக்கிடுவது நியாயமற்ற செயலாகும். எனினும், அந்த நடைமுறையே தொடர்கின்றது என்பது கசப்பான உண்மையாகும். 

கடந்த ஒக்டோபர் மாதம் பிரதான நீர்மின் நிலையங்கள் மூலம் 432 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், அந்த அளவு 548 ஜிகாவாட்வரை அதிகரித்திருந்தது. நிலக்கரி மூலம் 494 ஜிகாவாட்  மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என கணிக்கப்பட்டிருந்தாலும் நிலக்கரியில் இயங்கும் விசையாழிகளை மாற்றி 356 ஜிகாவாட் மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளனர். 

டீசல் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் காற்றாலை மின் நிலையங்களிலும் இதே நிலைதான். உத்தேசிக்கப்பட்ட செலவை விட குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.  எனவே, ஒக்டோபர் மாதத்துக்குரிய கணக்கீடுகளைச் சரியாகச் செய்தால், ஒரு மின் அலகுக்கான மொத்த விலை ரூ.17.82 ஆக இருக்கும் என கூறப்படுகின்றது. ஆனால், ஒக்டோபர் மாத விலை திருத்தத்தின் பின்னர், அந்த அதிகரிப்புடன் தொடர்புடைய மின் அலகு ஒன்றின் சராசரி மதிப்பாக 50.11 ரூபா கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அனைத்து விடயங்களினூடாகவும் கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கை மின்சார சபைக்கு கிடைத்ததாக கூறப்படும் இலாபம் 19,168.99 மில்லியன் ரூபாவாகும்.

எனவே, மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் உண்மையான அளவைக் கொண்டு கணக்கிடப்படும் வரையறுக்கப்பட்ட லாபத்துடன் முன்னோக்கி செல்லும் விலை சூத்திரத்தை நாம் முன்மொழிய வேண்டும். நீர் மின்சாரம் அதிகம் பயன்படுத்தப்படும் காலகட்டங்களுக்கு அந்தச் சலுகை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். நீர் என்பது நம் அனைவருக்கும் சொந்தமான ஒரு வளம். எனவே, மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்தி திறமையாக உற்பத்தி செய்யும் காலத்துக்கு மக்களுக்கு அந்த நிவாரணம் வழங்க வேண்டும்.

மறுபுறத்தில் அதிக செலவில் டீசல் மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை குறைந்த அளவில் பெற்றுக்கொள்வதற்கான திட்டத்தை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவும், மின்சார சபையும் திட்டங்களை வகுக்க வேண்டும். எனினும், எல்லா சுமைகளும் மக்களின் தோளில் இறக்கி வைக்கப்படும் நடவடிக்கையே இங்கு இடம்பெறுகின்றது. வரிச்சுமைகளால் மக்கள் ஏற்கனவே கமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், எனவே, எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் எத்தனை குடும்பங்களின் மின் இணைப்பை துண்டிக்க நேரிடுமோ தெரியவில்லை……ஆனால் அது லட்சத்தை தாண்டலாம்.