You are currently viewing புதிய சுகாதார அமைச்சின் முன்னால் உள்ள சவால்கள்…!

புதிய சுகாதார அமைச்சின் முன்னால் உள்ள சவால்கள்…!

நாட்டின் மருத்துவ – சுகாதார நிலைமை மிக மோசமான கட்டத்தை எட்டி இருப்பது கண்கூடு. கொவிட் தொற்று ஏற்படுத்திய பொருளாதாரத் தாக்கம், அந்தத் தொற்றினால் அதிகரித்த மருத்துவ – சுகாதார செலவினங்கள், அதை அடுத்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, இக்கட்டு போன்ற இன்னோரன்ன சூழ்நிலைகளினால் நாட்டின் சுகாதார சேவை நிலைமை மிக மோசமான கட்டத்தை எட்டி உள்ளது.

மருந்துகள் இல்லை. மருத்துவ உபகரணங்கள், அறுவை சிகிச்சைக்கான கருவிகள், அத்தியாவசிய
மருத்துவ சேவைக்கான அடிப்படை மூலப் பொருள்கள் என எல்லாவற்றிற்கும் பற்றாக்குறை, தட்டுப்பாடு.

இலவச மருத்துவ வசதி இல்லாமலே போகும் மோசமான கட்டத்தை நோக்கி வைத்தியத்துறை நகர்ந்து இருக்கிறது. இந்தப் பின்னடைவுகள், சிக்கல்களைப் பயன் படுத்தி ஊழல், மோசடி, சூறையாடல், லஞ்சம் போன்றவையும் தம் கைவரிசையைக் காட்ட மருத்துவத்துறை ஆபத்தான கட்டத்தை எட்டி இருக்கின்றது. புதிதாகப் பதவியேற்றிருக்கும் சுகாதார அமைச்சர் வைத்தியத்துறையில் தொற்றுக்களைக் களையவும்,
புற்றுநோய் போல புரையோடி இருக்கும் ஊழல்தரப்புகளை வெட்டி அகற்றவும் தீர்க்கமான
நடவடிக்கைகளையும் முடிவுகளையும் எடுக்கவேண்டியவராக இருக்கின்றார்.

பொது சுகாதார நிலைமை மோசமடைந்தமைக்கு சுகாதாரத்துறை நிர்வாகமே நேரடிப்பொறுப்பு என்று பொது கணக்குகளுக்கான நாடாளுமன்ற உபகுழு நேரடியாக முடிவொன்றுக்கு வந்திருக்கின்றது. கணக்காய்வாளர் நாயகத்தினால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் ஊழல்கள், முறைகேடுகள், தவறான கையாளுகை, மோசமான நிர்வாக நடவடிக்கைகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்த சுகாதார அமைச்சு தவறி உள்ளது என்ற விடயத்தை மேற்படி பொது கணக்குகளுக்கான நாடாளு
மன்ற உபகுழு ஏற்று, சுகாதார அமைச்சின் முகாமைத்துவமே அனைத்துக்கும் காரணம் என்று கூறியுள்ளது.

நாட்டின் மக்களுக்குப் பெரும் பாதிப்புகளை யும், பெருமளவு நிதி விரயத்தையும் இந்த நிர்வாகச் சீர்கேடுகள் ஏற்படுத்தி இருக்கின்றமை வெளிப் படையானது. குற்றத்தின் விவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இழப்பின் தாக்கம் உணரப்பட்டிருக்கின்றது.

மோசமான நிலைமை ஏற்பட்டமைக்குக் காரணமான – பொறுப்பான – தரப்புக்களும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தப் பெரும்தவறுக்கு யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட
போகின்றது? யாரைத் தண்டிக்கப் போகிறார்கள்?யார் மீதாவது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? வாய்ப்புகள் ரொம்பவும் குறைவு.

பொறுப்பு கூறல் நிலைநாட்டப்படுவதேயில்லை என்ற சாதனையின் உச்சத்தில் நாடு இருக்கும் வரை, அதற்கு மீட்சியே கிடையாது. ஊழல், மோசடி, லஞ்ச லாவண்யம், சூறையாடல், மோசமான முகாமத்துவம் என்று எல்லா பின்னடைவுகளிலும் சிக்கி கடைசியில் தோற்றுப்போன நாடாக இலங்கை மாறுவது தவிர்க்க முடியாத நிலைமைதான்.