You are currently viewing ஆஸ்திரேலியாவில் நடைபெறும் சர்வஜன வாக்கெடுப்பும் இலங்கையும்!

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் சர்வஜன வாக்கெடுப்பும் இலங்கையும்!

ஆஸ்திரேலியாவில் பூர்வகுடி மக்களுக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கு மக்கள் ஆணைகோரும் வரலாற்று முக்கியத்துவமிக்க சர்வஜன வாக்கெடுப்பு நாளை (14) இடம்பெறவுள்ளது.

“YES” , “NO” என்ற இருமுனை பரப்புரையால் அரசியல் களம் கடந்த காலங்களில் சூடுபிடித்திருந்தது. சுமார் 24 வருடங்களுக்கு பிறகு சர்வஜன வாக்கெடுப்பொன்று நாளை 14 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதால் அதனை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கான வேலைத்திட்டங்களை தேர்தல் ஆணைக்குழுவும் முன்னெடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவை குடியரசாக்குவது தொடர்பில் கடைசியாக 1999 இல் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 11,785,000 பேர் வாக்களித்தனர். 0.86 வீத வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. செல்லுடியான 99.14 வீத வாக்குகளில் 54.87 வீதமானோர் NO எனவும், 45.13 வீதமானோர் YES எனவும் வாக்களித்தனர். இதன்படி குறித்த சர்வஜன வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது.

இம்முறை பூர்வகுடி மக்களுக்கான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் மற்றும் அமைப்பு தொடர்பில் மக்களிடம் கருத்து கோரப்படுகின்றது. சர்வஜன வாக்கெடுப்பு வெற்றியளிக்க வேண்டுமெனில் செல்லுபடியான மொத்த வாக்குகளில் 50 வீதத்துக்கு மேல் YES என இருத்தல் வேண்டும். அதேபோல ஆஸ்திரேலியாவில் உள்ள ஆறு மாநிலங்களில் நான்கு மாநிலங்களின் ஆதரவும் அவசியம்.

குறித்த சர்வஜன வாக்கெடுப்பு வெற்றிபெற்று அது அரசமைப்புக்குள் உள்வாங்கப்பட்டால், பூர்வகுடி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிரந்தரக் குழு நிறுவப்பட்டு, அந்தக்குழு பூர்வீக குடிகளைப் பாதிக்கும் நாட்டின் கொள்கைகளை ஆராய்ந்து – அவை தொடர்பில் அரசுக்கு அறிவுரை வழங்கும். ஆனால் நாடாளுமன்றம் தமக்கு இணங்காத கொள்கைகளை நிறைவேற்றுவதைத் தடுக்கும் அதிகாரம் இந்தக்குழுவுக்கு கிடையாது. சிலவேளை வாக்கெடுப்பு தோல்வியடையும் பட்சத்தில் அந்த முயற்சி கிடப்பில் போடப்படும்.

ஆஸ்திரேலிய வரலாற்றில் இதுவரை 44 சர்வஜன வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 8 வாக்கெடுப்புகள் மட்டுமே வெற்றிபெற்றுள்ளன. வெற்றி பெற்ற வாக்கெடுப்புகளுக்கு பிரதான கட்சிகளின் ஆதரவும் இருந்தன. குரல் வாக்கெடுப்பை பிரதான எதிர்க்கட்சியான லிபரல் கட்சி கடுமையாக எதிர்த்துள்ளது. எனவே, இந்த வாக்கெடுப்பு வெற்றிபெறுமா என்ற கேள்வியும் மேலோங்கியுள்ளது.

NO என வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையே அதிகமென உத்தியோகப்பூர்வமற்ற கருத்துக் கணிப்புகள் தெரிவித்தாலும், வாக்களிப்பு வெற்றிபெறும் எனற நம்பிக்கையை பிரதமர் அந்தனி அல்பானீஸி வெளியிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியப் பிரஜைகளுடன் ஒப்பிடுகையில் பூர்வகுடி மக்களின் ஆயுட்காலம், கல்வி, சுகாதாரம், சமூக கட்டமைப்பு, வீட்டுவசதி போன்றவை பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. அவர்கள் மீதான புறக்கணிப்புகள் தொடர்கின்றன. ஏதோவொரு விதத்தில் அவர்கள் சுரண்டப்படுகின்றனர். எனவே, அவர்களுக்கு அரசமைப்பு ரீதியில் அங்கீகாரம், அதிஉயர் சபையில் குரல் ஒலிப்பது என்பன காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது.

லேபர் அரசு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பூர்வகுடி மக்கள் பற்றி உறுதியளித்திருந்தது. அதற்கு மக்கள் ஆணை வழங்கப்பட்டது. எனவே, சர்வஜன வாக்கெடுப்பை ஆதரிக்க வேண்டியது மக்களின் பொறுப்பாகும்.

சர்வஜன வாக்கெடுப்பு வெற்றிபெற்றால் அது தமக்கு அரசியல் ரீதியில் பின்னடைவாக அமையும் என்பதாலும், தோல்வி அடைந்தால் அதன்மூலம் முன்னோக்கி நகரலாம் எனவும் லிபரல் கட்சி திட்டம்போட்டுள்ளது. அந்தக்கட்சியினர் “No” பிரசாரத்தில் இறங்குவதற்கான காரணிகளுள் இதுவும் பிரதானமானது.

சர்வஜன வாக்கெடுப்பு தோல்வி அடைந்தால் அது உலக அரங்கிலும் ஆஸ்திரேலியாவுக்கு அவமானமாக அமையும்,

அதேவேளை, இலங்கையிலும் அனைத்து இன மக்களையும் சமசமா வழிநடத்தக்கூடிய புதியதொரு அரசமைப்பு அவசியம். 1978 இல் அறிமுகப்படுத்தப்பட்ட அரசமைப்பு 21 தடவைகள் திருத்தப்பட்டிருந்தாலும் நவீன யுகத்துக்கேற்ற வகையிலான மாற்றங்கள் இல்லை.

அதேபோல தமக்கு அரசியல் தீர்வு வேண்டுமென தமிழ் மக்கள் கோரிவருகின்றனர். அதற்கு அரசமைப்பு ரீதியில் அங்கீகாரம் அவசியம். எனவே, புதியதொரு அரசமைப்பு இயற்றப்பட்டு, அது சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். 78 ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கையில் மீண்டுமொரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமா?

ஆஸ்திரேலியாவில் பூர்வக்குடி மக்களுக்கு நீதியை வழங்குவதற்கான முயற்சி இடம்பெறுகின்றது. இலங்கை மண்ணிலும் சிறுபான்மையின மக்களுக்கு நீதியை, சம உரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுதல் அவசியம்.

சர்வஜன வாக்கெடுப்பு தோல்வி அடைகின்றது என கருத்து கணிப்புகள் தெரிவித்தாலும், நாட்டுக்குள் எதிர்ப்புகள் இருந்தாலும் முயற்சியை ஆஸ்திரேலிய அரசு கைவிடவில்லை, இலங்கையிலும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்ப்புகள் வரலாம், ஆனாலும் முயற்சி நிறுத்தப்படக்கூடாது.