அமைச்சர் ஹாபீஸ் நஷீர் விவகாரம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, விசேட சட்டத்தரணிகள் அடங்கிய குழுவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். இதனை முன்தாரியாகக் கொண்டு கட்சியால் தீர்மானங்கள் எடுக்கப்படும்.”
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
உயர்நீதிமன்ற தீர்ப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கட்சியின் தீர்மானத்தினை மீறி 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டார்.
இந்த நீக்கலுக்கு எதிராக அமைச்சர் நசீர் அஹமட் உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கிலேயே மேற்படி தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்வலை
அமைச்சர் நசீர் அஹமட் விவகாரம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்று முக்கித்துவமிக்க தீர்ப்பானது, தெற்கு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் முடிவையும்மீறி மாற்று கட்சிகளுக்கு ‘பல்டி’ அடிப்பதற்கு தயாராகிவந்தவர்களுக்கு தமது முடிவை மாற்றியமைப்பது குறித்து சிந்திக்க வேண்டியேற்பட்டுள்ளது.
அத்துடன், கட்சி தாவியதால், . நீதிமன்றத்தில் தற்போது வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளவர்களுக்கும், இத்தீர்ப்பு அடிவயிற்றில் புளியை கரைத்துள்ளது.
மேற்படி தீர்ப்பின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஹாபீஸ் நஷீர் இழப்பார்.
கடந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது சொந்த சின்னமான மரத்திலேயே போட்டியிட்டது. ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியது.
நசீர் அஹமட் நாடாளுமன்றம் வந்தார். அவர் எம்.பி. பதவியை இழப்பதால், விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள அலிசார் மௌலானா எம்.பியாக பதவியேற்கவுள்ளார். அவரின் பெயரை தேர்தல் ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பி வைக்க முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
மொட்டு கட்சியின் நிலைப்பாடு
இந்நிலையில் மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வழக்கு தீர்ப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட மொட்டு கட்சி செயலாளர் சாகர காரியவசம்,
” நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பதவி இழக்கப்படும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருந்த நிலைமையைவிட மாறுபட்டதானதொரு வழக்கு தீர்ப்பாக இது அமைந்துள்ளது.
விசேட சட்டத்தரணிகள் குழுவின் கவனத்துக்கு இந்த தீர்ப்பை கொண்டு சென்றுள்ளோம், இதற்கமைய கட்சி என்ற அடிப்படையில் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது, அதேபோல கட்சிக்கு எதிராக செயற்படும் நபர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை எது என்பது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படும்.” – என்று குறிப்பிட்டார்.
இலக்கு வைப்பு
அதாவது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டுவிட்டு, அதில் இருந்து விலகி, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளை இலக்கு வைத்தே சாகர இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகய , டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை, அநுர யாப்பா அணி என்பன மொட்டு சின்னத்தில்தான் போட்டியிட்டு வெற்றிபெற்றன. மொட்டு கட்சி உறுப்பினர்களாகவும் அங்கம் வகித்தனர்.
எனவே, இந்த வழக்கு தீர்ப்பை வைத்துக்கொண்டு, ஏதேனும் நடவடிக்கையை எடுப்பதற்கு மொட்டு கட்சி முற்படலாம்.
அதேபோல டயானா கமகே உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து அரசு பக்கம் சென்றவர்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பதற்கான துணிவை கட்சிகளுக்கு இத்தீர்ப்பு வழங்கியுள்ளது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்ப்பு
தெற்காசியாவில் முதன்முதலில் வாக்குரிமை கிடைத்த நாடுதான் இலங்கை. ஜனநாயகத்துக்கு உரிய இடம் வழங்கப்பட்டுவந்தது. எனினும், விகாதாசார தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இந்த தேர்தல் முறைமையும், கட்சி தாவல்களும் ஜனநாயகத்துக்கு இழுக்காக அமைந்தது.
ஒரு கட்சியில் போட்டியிட்டுவிட்டு, வாக்குகளைப் பெற்று கட்சி தாவுவது சாதாரண சம்பவமாக இடம்பெற்றுவந்தது. அக்கட்சிகள் நீதிமன்றத்தைநாடினால்கூட கட்சி தாவியவர்களுக்கு ஏற்புடைய வகையிலேயே தீர்ப்புகள் வந்தன. சிலவேளை வழக்கு தொடுத்த தரப்புகள் உரிய ஆதாரங்களை முன்வைக்காமல் இருந்திருக்கலாம். கட்சிகளின் யாப்புகள் பலவீனமானதாக இருக்கலாம். ஆனால் தற்போது வந்துள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் மிக்கது.