You are currently viewing திருமலை சம்பவம் நல்லிணக்கத்துக்கு சாபக்கேடு!

திருமலை சம்பவம் நல்லிணக்கத்துக்கு சாபக்கேடு!

” இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்பின் உறுப்பினரை நினைவுகூர்ந்து வாகன பேரணியை முன்னெடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை உடனடியாக கைது செய்து, அவருக்கு எதிராக வழங்கு தொடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார். எனினும், செல்வராசா கஜேந்திரனை தாக்கியவர்கள் உடன் கைது செய்யப்பட வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

திருகோணமலையில் இரு இடங்களில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி மீது நேற்று மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி மீது திருகோணமலையின் கப்பல்துறை இராணுவ முகாமுக்கு அருகாமையில் வைத்தும், சர்தாபுர சந்திக்கு அருகாமையில் வைத்தும் காடையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

இரு இடங்களிலும் கற்கள், கொட்டன்கள் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் திலீபனின் திருவுருவப் படமும், அதைத் தாங்கி வந்த வாகனமும் சேதமடைந்துள்ளன.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணி நடராஜா காண்டீபன் மற்றும் செயற்பாட்டாளர்களான கண்ணன், பிரேம் ஆகியோர் மீதும் சிங்களவர்களால் தாக்குல் நடத்தப்பட்டது. இது தொடர்பான காணொளிகளும் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

ஜனநாயக வழியில் முன்னெடுக்கப்பட்ட இப்பேரணிமீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலை ஜனநாயக செயற்பாட்டாளர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர். அடிப்படைவாதிகளே இதன் பின்னணியில் உள்ளனர் எனவும் விமர்சித்துள்ளனர்.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் உதயன் கம்மன்பில மாறுபட்ட கருத்தை இன்று முன்வைத்துள்ளார்.

” புலிகள் அமைப்பின் அமிர்தலிங்கம் திலீபனை நினைவுகூரும் வகையில் கிழக்கில் இருந்து வடக்குக்கு வாகன பேரணி முன்னெடுக்கப்படும்போது மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த நாட்டை பிளவுபடுத்தும் புலிகள் அமைப்பின் கனவு நிறைவேறுவதற்காக தனது உயிரை பலிகொடுத்தவர்தான் திலீபன். புலிகள் இந்நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். எனவே, புலிகள் அமைப்பின் சிவப்பு, மஞ்சள் நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனமொன்றில் திலீபனின் உருவப்படத்தை வைத்துக்கொண்டு கிழக்கில் இருந்து வடக்குக்கு பேரணி செல்வதற்கு அனுமதி வழங்கியது யார்? எவரேனும் அதிகாரி அனுமதி வழங்கி இருப்பாரானால் அவர் நாட்டின் அரசமைப்பை அப்பட்டமாகமீறியவராக கருதப்படுவார்.   அதேபோல அதிகாரிகளுக்கு அரசியல்வாதி எவரேனும் இது சம்பந்தமாக ஆலோசனை வழங்கியிருந்தால் அவரும் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட வேண்டும்.” என கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், புலிகள் அமைப்பு என்பது அப்பாவி சிங்கள மக்களை இலக்கு வைத்து 300 இற்கு மேற்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய அமைப்பாகும். புலிகளின் தாக்குதல்களால் தமது உறவுகளின் எவரேனும் ஒருவரை சிங்கள சமூகம் இழந்திருக்கும். எனவே, அவ்வமைப்புமீது சிங்கள மக்களுக்கு எதிர்ப்பு, வைராக்கியம், கோபம் இருப்பது இயல்பே.

இவ்வாறானதொரு பின்புலத்தில் புலிகள் அமைப்பின் உறுப்பினரை நினைவுகூர்ந்து, கிழக்கில் சிங்கள கிராமம் ஒன்றின் ஊடாக வாகன பேரணியை முன்னெடுத்திருப்பது இனவாதத்தை தூண்டி, மக்களை குழப்பும் சூழ்ச்சி நடவடிக்கையாகும். கஜேந்திரகுமார் ஒரு புறத்தில் அரசமைப்பை மீறியுள்ளார். மறுபுறத்தில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் ஏற்பாடுகளை மீறியுள்ளார். எனவே, கஜேந்திரன் எம்.பி. உடன் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முறைப்பாடு கிடைக்கவில்லை என பொலிஸார் கூறலாம். எனவே, நாம் நாளை முறைப்பாடு செய்வோம். 

மக்கள் சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்டதில் தவறு இருக்கலாம். ஆனால் மக்களை குழப்பும் வகையில் செயற்பட்ட கஜேந்திரன் எம்.பில் இருந்தே சட்டம் செயல்பட தொடங்க வேண்டும்.” – எனவும் கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

கண்டனம்

” திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது மிலேச்சத்தனமான முறையில் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்த வேண்டும். – என்று அரசிடம் வலியுறுத்தியுள்ளார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

“நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது பொலிஸார் முன்னிலையில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இந்தத் தாக்குதல் நடத்தியவர்களை இலகுவில் அடையாளம் காணும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன்பாக
நிறுத்துமாறும் வலியுறுத்துகின்றோம்.” – எனவும் சுமந்திரன் வலியுறுத்தினார்.

அதேவேளை இத்தகைய சம்பவங்கள் நாட்டில் இன ஐக்கியத்துக்கு சாபக்கேடாகவே அமையும்.

Leave a Reply