சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இம்முறைக் கூட்டத் தொடரில், இலங்கை ஆட்சியாளர்களின் அதிகாரப் பகிர்வு தொடர்பான சாதகமான அணுகுமுறை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை காவல்துறை அதிகாரம் தவிர்த்து நடைமுறைப்படுத்தப் போவதாக அரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருப்பதை ஐ.நா. மனித உரிமை கள் உயர் ஆணையர் தனது அறிக்கையில் வரவேற்றிருந்தார்.
தொடர்ந்து இலங்கை விவகாரத்தில் உரையாற்றிய மேற்கு நாடுகள் பலவும் அதே பாணியில் ரணிலின் இந்த முயற்சியை வரவேற்று உரையாற்றியிருந்தன.
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினமான மாசி 4க்கு முன்னர் முழுமையாக நடை முறைப்படுத்தப்போவதாக அரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார். ஆனால், அது நடைபெறவில்லை. அது தொடர்பில் அவர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சில கடும்போக்கு அரசியல்வாதிகள் எதிர்த்துக் குரல் கொடுத்ததைத் தொடர்ந்தும் பிக்குகளின் எதிர்ப்புக் காரணமாகவும் அவர் அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டார்.
அதன் பின்னர் மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, 13ஆவது திருத்தத்தில் உள்ள காவல்துறை அதிகாரத்தைத் தவிர மற்றைய எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்தத் தான் முன்முயற்சிகளை எடுக்கப் போவதாக அறிவித்தார். அதற்கான நடைமுறைகள் குறித்தும் தெரிவித்தார். ஆனால், அந்தக் கூட்டம் முடிந்து மாதங்கள் கடந்த பின்னர் இன்று வரையில் அது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க
வில்லை. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான எந்த நடவடிக்கையும்கூட எடுக்கப்படவில்லை.
இதற்கிடையில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும் சேர்ந்துகொண்டு, அவரால்
முன்வைக்கப்பட்ட யோசனையான மாகாண சபை அதிகாரங்களைப் பலப்படுத்துதல் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார் ரணில் விக்கிரமசிங்க. இதன்படி மாகாண சபைகளுக்கு ஆலோசனைச் சபைகள் நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்தச் சபைகள், மத்தியிலிருந்து மீளப்பெறப்பட்ட மாகாண அதிகாரங்களை மீண்டும் மாகாணங்களுக்கே திருப்பியளிப்பது தொடர்பான
ஆலோசனைகளை முன்வைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு வேண்டிய சட்டங்களை ஆக்கும் பொருட்டு சட்ட வரை வுகளைத் தயாரிக்கப் தலைமை அமைச்சர் டினேஸ் குண வர்த்தன தலைமையில் மற்றொரு குழு நியமிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இவற்றில் எவையும்கூட இதுவரையில் நடக்கவில்லை. வழக்கம்போலவே இந்த விடயத்தில் ரணில் விக்கிரமசிங்க காலத்தைக் கடத்தி வருகின்றார் என்பது வெளிப்படையானது.
அடுத்த வருடத்தில் எப்படியும் நடத்தப்படவேண்டியிருக்கும் அரசுத் தலைவர் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில், 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது என்பது – அதுவும் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் அதனை நடைமுறைப்படுத்துவது என்பது – சாத்தியமற்றதொன்று என்பது இலங்கையின் வரலாற்றைத் தெரிந்த அனைவருக்கும் தெரிந்த சங்கதி. அப்படியிருக்கும்போதும், ரணிலின் ஏமாற்று வித்தைக்குள் சிக்கிக்கொண்டு ஐநா மற்றும் மேற்கு நாடுகள் அவரது முயற்சி என்று சொல்லப்படுவதை வரவேற்றிருப்பது
கவலையளிக்கிறது. ஏமாற்றமளிக்கிறது.
அதற்கும் மேலாக 13ஐ நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பாக ரணில் அறிவித்திருக்கும் முயற்சிகளை அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான நடவடிக்கை என்றுகூறிப் பல நாடுகள் வரவேற்றிருப்பதும், அது தொடர்பிலான அர்ப்பணிப்பை ஆட்சியாளர்கள் வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி
யிருப்பதும் மேலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.நா. மற்றும் பன்னாட்டு அரசுகளின் அழுத்தம் மூலமே இலங்கையில் தமக்கு நீதியும் நியாயமும் அரசியல் தீர்வும் கிடைக்கும் என்று நம்பியிருந்த தமிழர்களுக்கு இது பேர திர்ச்சியையும் ஏமாற்றத்தையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கை ஆட்சியாளர்கள் பன்னாட்டுச் சமூகத்தை மிக இலகுவாக ஏமாற்றுகின்றது என்கிற பதிவையும் ஏற்படுத்துகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தாமலே இலங்கை அரசு ஏமாற்றி வரும் நிலையில் பன்னாட்டுச் சமூகம் மீண்டும் மீண்டும் அதற்கு ஆதரவாகவே நடந்துகொள்வது தமிழர்களைச் சலிப்படையச் செய்துள்ளது என்பதே உண்மை.
நன்றி – காலைக்கதிர் (ஆசிரியர் தலையங்கள்)