You are currently viewing ‘கொக்குத்தொடுவாய் மனிதப்புதைக்குழி’ – சர்வதேச விசாரணை கோரப்படுவது ஏன்?

‘கொக்குத்தொடுவாய் மனிதப்புதைக்குழி’ – சர்வதேச விசாரணை கோரப்படுவது ஏன்?

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைக்குழி அகழ்வுப்பணி தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அகழ்வின்போது ஒரு சில மேலதிக மனித எலும்புக்கூடுகள் இனம் காணப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சன்னங்கள் என்று சந்தேகப்படும் ஒரு சில உலோகத்துண்டுகளும் வேறு சில தடயப்பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அந்தப் புதைகுழியில் இருப்பது இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் மனித எச்சங்களே, தடயப் பொருள்களும் அதனையே உணர்த்துகின்றன என்று முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராஜா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அவரது ஊகம் சரியா என்பது தொடர்ந்து நடை பெறப் போகின்ற அகழ்வு நடவடிக்கைகள், அதனைத்
தொடரப் போகின்ற நிபுணத்துவ பரிசோதனைகள் மற்றும் நீதிமன்ற விசாரணைகள் போன்றவை மூலமே
உறுதி செய்யப்பட முடியும். ஆனால் இலங்கையில் மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கை என்பது சில,பல பொது விடயங்களுக்காக அவ்வப்போது நியமிக்கப்படும் ஆணைக்குழு விவகாரத்தை ஒத்தது.

ஆணைக்குழு அமைக்கப்படும் நேரம், நிதி, மனித வளம் போன்றவற்றை விரயம் செய்து, ஆணைக்குழு அமர்வுகளை நடத்தும். விசாரணைகள் முன்னெடுக்கும், சில சமயங்களில் அறிக்கைகள் வரும். பல சமயங்களில் அவை வெளியே வராமலும் போகும். ஆனால் அந்த ஆணைக் குழுக்களினால் பெரும்பாலும் பயன் ஏதும் கிட்டுவதில்லை. இலங்கையில் மனிதப் புதைகுழி அகழ்வு விவகார மும் பல சமயங்களில் அப்படித்தான். வடக்கில் உள்நாட்டு யுத்தத்தை ஒட்டி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கு, செம்மணி, மன்னார் போன்ற இடங்களிலும், இப்போது கொக் குத்தொடுவாயிலும் மனிதப் புதைகுழிகளின் அகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. இடம்பெறுகின்றன. அவை எவற்றி லும் காத்திரமான முன்னேற்றமோ, முடிவுகளோ எட்டப்படவில்லை.

மன்னாரில் மட்டும் 110 பேருக்கும் மேற்பட்டோரின் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. யாழ். துரையப்பா விளையாட்டரங்கு மற்றும் செம்மணி மனிதப் புதைகளில் தலா ஒன்றரை டசினுக்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை அகழ்ந்து எடுக்கப்பட்டன. அவ்வளவு தான். அதற்கு மேல் விடயம் ஏதும் நகரவில்லை.

குறைந்தபட்சம் அவற்றின் மீதான நிபுணத்துவ பகுப்பாய்வு முழு அளவில் நடைபெற்றதாகவோ முடிவுகள் கண்டறியப்பட்டனவாகவோ தகவல் எதுவுமில்லை. எல்லாம் ஒரு கட்டத்தில் முழுமை யாகக் கிணற்றில் போட்ட கல்லாகத் தூங்கிவிட்டன. தேங்கிவிட்டன.

1988 – 89 காலப்பகுதியில் தெற்கில் நடந்த அரச கிளர்ச்சியை ஒட்டி தெற்கிலும் சூரியகந்த, வன வாசல், மாத்தளை போன்ற இடங்களில் மனிதப் புதைகுழிகள் அகழப்பட்டன. சூரியகந்த புதைகுழி தொடர்பில் கணிசமான முன்னேற்றம் காணப்பட்டது. உண்மைகள் ஓரளவு அம்பலமாகின. ஆனால், வடக்கில் மனிதப் புதைகுழி அகழ்வு, வெறுமனே மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டமையுடன் தேக்கம் கண்டு விடுகின்றன. அந்த நிலைமையை மாற்றுவதற்காகத்தான் – உண்மைகளைக் கண்டறியும் நிலைமை வரை விடயங்களை முன்னேற்றுவதற்காகத்தான் – சர்வதேச கண்காணிப்பாளர்களின் பங்களிப்புடன் இந்த விடயம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்படுகின்றது. கொக்குத்தொடுவாய் மனிதப் புதை குழி அகழ்விலும் அது இடம்பெறாதமை இந்த அகழ்வுப் பணி தொடர்பிலும் ஆரம்பத்திலேயே அதிருப்தியை தந்து நிற்பது கண்கூடு. எனவே, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேகம் களையப்பட வேண்டும்.

Leave a Reply