You are currently viewing பொறுப்புகூறலில் ‘ஆமைவேக’ அணுகுமுறை ஆபத்தையே விளைவிக்கும்…!

பொறுப்புகூறலில் ‘ஆமைவேக’ அணுகுமுறை ஆபத்தையே விளைவிக்கும்…!

சர்வதேச அரங்கில் முக்கியத்துவமிக்க ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் சுவிஸ் தலை நகரான ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.  

இதன்போது உலக நாடுகளின் மனித உரிமை நிலைவரம் மற்றும் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த நாடுகள் முன்னெடுத்த நடவடிக்கையின் முன்னேற்றத்தன்மை பற்றி விரிவாக ஆராயப்படவுள்ளது. 

குறிப்பாக இலங்கை தொடர்பில் ‘நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பில் 51/1 தீர்மானத்தின் அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை முன்வைக்கப்படவுள்ளது. இந்த அறிக்கையின் வரைவு நகல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான பதிலை இலங்கை ஓரிரு நாட்களில் அனுப்பிவைக்கவுள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்கள் சில நிறைவேற்றப்பட்டிருந்தாலும் அவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா என்பது கேள்வியே. சர்வதேச தலையீட்டை இலங்கை நிராகரித்திருந்தாலும் உள்ளக பொறிமுறையென்பதுகூட திருப்தியடைய முடியாத வகையிலேயே உள்ளது என பாதிக்கப்பட்ட மக்களின் உள்ளக் குமுறல்களில் இருந்து அறியமுடிகின்றது.

54 ஆவது கூட்டத்தில் இலங்கைமீது புதிய தீர்மானங்கள் எவையும் நிறைவேற்றாதபோதிலும், காத்திரமான நடவடிக்கைகளுக்கான கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும் என தமிழ்க் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஜெனிவா தொடரில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் அல்லது அமைச்சின் செயலாளர் மட்டத்திலான குழு பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் இலங்கையில் இருந்து மாநாட்டுக்காக செல்லவுள்ளனர். மேலும் பல அமைப்புகள் தமது கோரிக்கைகளை ஆவணங்களாக அனுப்பிவைத்துள்ளன.

ஜெனிவா அமர்வு ஆரம்பமாவதற்கு  அண்மித்த நாட்களில் மனித உரிமைகள், அரசியல் தீர்வு விடயங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களை தூசி தட்டி வெள்ளையடிக்கும் செயற்பாட்டை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துவிடும். இனியும் அந்த அணுகுமுறை எடுபடுமா என்பதை ஒன்றுக்கு நூறு தடவைகள் சிந்தித்து செயற்படுவதே ஏற்புடைய நடவடிக்கையாக அமையும்.

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலக சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை கடந்தவாரம் அனுமதி வழங்கியுள்ளது. 

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள திருத்தங்களை உள்ளடக்கி, அந்த சட்டமூலத்தை மீண்டும் தயாரிப்பதற்காக சட்டவரைஞர் குழுவிற்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 

நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால், அமைச்சரவைக்கு கடந்த (28) சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்டமே தற்போது நடைமுறையில் காணப்படுகின்றது. 

அந்த சட்டத்தை நீக்கி, புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக, சட்டவரைஞர்களினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலமொன்றை வர்த்தமானியில் வௌியிட கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. 

எனினும், வர்த்தமானியில் வௌியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது ஆலோசனைகளை முன்வைத்திருந்தனர். 

குறித்த யோசனைகளை கருத்திற்கொண்டு சட்டமூலத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை தீர்மானித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்திருந்தது.

ஜெனிவா தொடர் நெருங்கும் நிலையில் இவ்வாறான நகர்வுகளை இலங்கை மேற்கொண்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் முன்னேற்றம் உள்ளது. ஆனால் காணாமல்ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கு இன்னும் விடை இல்லை. வடக்கு கிழக்கில் 2000 நாட்களைக் கடந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர், எனினும் இதுவரையில் அவர்களுக்கு பதில் இல்லை. 

பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச விசாரணையை நிராகரிக்கும் உரிமை இறையாண்மைமிக்க நாடு என்ற வகையில் இலங்கைக்கு உள்ளது. அதேபோல உள்ளக பொறிமுறைமூலம் நிதியை வழங்கக்கூடிய கடப்பாடும் அதற்கு இருக்கின்றது என்பதை மறந்துவிடக்கூடாது.

Leave a Reply