You are currently viewing சிங்கப்பூரிடமிருந்து இலங்கை கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்…!

சிங்கப்பூரிடமிருந்து இலங்கை கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்…!

சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக இலங்கையின், யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

1957 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பிறந்தவர் தர்மன். இவரது பாட்டனார் இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டம், ஊரெழு என்ற இடத்தைப் பிறப்பிடமாகக்கொண்டவர்.

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் ஈழத்தமிழரின் வம்சமான தர்மன் சண்முகரத்தினம், சீன வம்சாவளியைச் சேர்ந்த காச்சோங் மற்றும் டான்தின் லியான் ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவியது. மூவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

எனினும், தர்மன் சண்முகரத் தினம் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
சிங்கப்பூரில் கிடைக்கப்பெற்றுள்ள இந்த வெற்றியானது இலங்கைக்கும் சிறந்த படிப்பினையாக அமைந்துள்ளது.

சிங்கப்பூர் சுதந்திரமடைந்தபோது ஆசியாவில் இலங்கையின் பொருளாதாரம் சிறந்த மட்டத்தில் இருந்தது. அதனால்தான் சிங்கப்பூரை இலங்கைபோல் மாற்றுவேன் என்று சிங்கப்பூரின் ஸ்தாபகத் தந்தையான லீ குவான் அறிவித்திருந்தார்.

குட்டி தீவான சிங்கப்பூரை மலேசியா ஓரங்கட்டியது. 1965 இல் மலேயாசில் இருந்து சிங்கப்பூர் பிரிந்தது. அதன்பின்னர் சிங்கப்பூர் என்ற குட்டி தீவை, வளர்ச்சியடைந்த தேசமாக மாற்றியமைக்கும் முயற்சிக்கு லீ குவான் தலைமை வழங்கினார். கடுமையாக உழைத்தார். இன பாகுபாடு காட்டப்படவில்லை. ஊழல், மோசடிகளுக்கு இடம் கொடுக்கப்படவில்லை. சட்டம் கடுமையாக அமுலில் இருந்தது. இதனால் ஒரு தலைமுறைக்குள் சிங்கப்பூர் வளர்ச்சியடைந்த நாடாக மாறியது.

உலகளவின் இன்று தனிநபர் தலா வருமானம் உயர்ந்த முதல் ஐந்து நாடுகளுக்குள் சிங்கப்பூரும் இருக்கிறது. மலேசியாவால் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட ஒரு குட்டித் தீவை, பொருளாதார, மற்றும் சமூக ரீதியாக வளர்ந்த நாடாக மாற்றியது லீ குவான் யூவின் சாதனை.

சிங்கப்பூர் அடைந்த பெரும் வளர்ச்சி, மலேசியாவில் சாத்தியப்படவில்லை. அங்கு பெரும்பான்மை மலாய் மக்கள், தங்கள் தேசத்தில் சீனர்கள் மற்றும் பிற சிறுபான்மையினரை குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே சேர்க்க வேண்டும் என்று விரும்பினர். இது மலேசியாவுக்குள் இன ரீதியான கொதிப்பு நிலைகள் உருவாகக் காரணமானது.

லீ இதனை நன்கு அவதானித்திருந்தார். லீ சிங்கப்பூருக்கான புதிய அரசாங்கக் கட்டமைப்பை மாற்றியமைக்க நினைத்தார். சிங்கப்பூரை அவர் ஒரு பல்லின மற்றும் பன்மொழி மாநிலத்தின் அடித்தளத்தில் கட்டினார். அவரது புதுமையான நிர்வாகம் மற்றும் ஆட்சி அணுகுமுறை சிங்கப்பூர் செழிக்கவும், 20 ஆம் நூற்றாண்டின் மிக வெற்றிகரமான வளர்ச்சிக் கதையாக மாறவும் காரணமானது.

சீனர்கள், மலாயர்கள், இந்தியர்கள் என பல்லினங்கள் நிறைந்த சிங்கப்பூரில் சீனர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஆனால் அங்கு தேசியவாதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை, மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. சம உரிமைக்கு இடமளிக்கப்பட்டது. சிங்கப்பூரின் வெற்றிக்கு இந்த ஒற்றுமையும் காரணம்.

இலங்கைபோல் முன்னேறுவோம் எனக்கூறிய சிங்கப்பூர் முன்னேறிவிட்டது, ஆனால் இலங்கை திண்டாடிக்கொண்டிருக்கின்றது. இதற்கு இனப்பிரச்சினை தீர்க்கப்படாமையும், அதனால் ஏற்பட்ட மோதல்களும் பிரதானக்காரணிகளாகும். எனவே, இலங்கை முன்னேற வேண்டுமெனில் இனப்பிரச்சினைக்கு கட்டாயம் தீர்வு காணப்பட வேண்டும். இன ஐக்கியம் சாத்தியமானால்தான் இலங்கையில் தலைதூக்க முடியும் என்பதே வரலாறு எமக்கு உணர்த்தும் பாடமாக உள்ளது. சிங்கப்பூரில் இனம், மதத்துக்கு அப்பால் திறமைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. தகுதியானவர்களுக்கு தகுதியான இடம் வழங்கப்படுகின்றது. அதற்கு சான்று தர்மன் சண்முகரத்தினத்தின் வெற்றி. சீன வம்சாவளி வேட்பாளர்களும் இருந்தனர், ஆனால் அங்கு தேசியவாதம் எடுபடவில்லை.

இலங்கையில் லீகுவான் போன்ற திறமையான தலைவர்கள் இருந்தாலும் அவர்கள் அரசியலுக்காக தேசியவாதத்துக்குள் மூழ்கிவிடுகின்றனர், இனம், மதம் என்பதை கையில் எடுக்கின்றனர். எனவே, லீகுவான்போன்று திறமை இருந்தாலும் அவர் தற்துணிவாக எடுத்த முடிவுகள்போல் முடிவெடுக்கும் ஆற்றலும் இருக்க வேண்டும். மக்கள் மனங்களிலும் மாற்றம் வேண்டும். அப்போதுதான் இலங்கை சிங்கப்பூராக மாறும்.

Leave a Reply