You are currently viewing ‘வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்’ – மீள் நிகழாமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்!

‘வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்’ – மீள் நிகழாமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்!

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வ தேச தினம் இன்று ஓகஸ்ட் 30 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. உலகின் பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களுக் காகவும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு நாளாக இது அனுஷ்டிக்கப்படுவது முக்கியமானதாகும்.

அந்த வகையில் இலங்கையின் வடக்கு – கிழக்கைத் தாயகமாகக் கொண்ட தமிழர்கள், தங்களது பல்லா யிரம் உறவுகளை இப்படி வலிந்து காணாமலாக்கப்பட்ட சூழ்நிலையில் பறிகொடுத்துத் தொலைத்துவிட்டு ஒன்றரை தசாப்த காலமாகத் தேடி அலையும் பேரவலம் இங்கு நீடிக்கின்றது.

அந்தக் காரணத்தினால் இன்று அனுஷ்டிக்கப்படும் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக் கான சர்வதேச தினம் மற்றைய நாடுகளிலும் விட இலங்கைத் தீவுக்கு முக்கியமானதாக அமைகின்றது.

படையினரால் கைது செய்யப்பட்டோர், கடத் தப்பட்டோர், அவர்களிடம் சரணடைந்தோர் என்று பல்லாயிரம் இளைஞர், யுவதிகள் என்னவானார்கள் என்று தெரியாத மனிதப் பேரவலம் இங்கு நீடிக்கின்றது.

அவர்களின் பெற்றோரும், உற்றார், உறவினர் கள், உடன்பிறப்புகள் என இரத்த உறவினர்களும், நண்பர்களும், அயலவர்களும் அவர்களுக்கு என்ன வாயிற்று, அவர்கள் மீள வருவார்களா அல்லது காணாமல்போனோர் என்ற பெயருடன் விடயம் நிரந்தரமாக முற்றுப்பெற வைக்கப்பட்டு விடுமோ
என்ற ஏக்கத்துடனும் அவலத்துடனும் காலத்தை ஓட்டியபடி கலங்கி நிற்கின்றனர்.

இப்படிப் பல்லாயிரம் பேர் காணாமலாக்கப்பட்ட விடயத்தில் ஒவ்வொருவருக்கும் என்ன நேர்ந்தது என்ற உண்மை கண்டுபிடிக்கப்பட வேண்டும். பின்னர் அவ்விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். காணாமலாக்கப்பட்ட சம்பவத்துக்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பொறுப்பு கூறல் நிறைவேற்றப்பட வேண்டும்.

அதனைத் தொடர்ந்து இழப்புக்கள், பாதிப்புகளுக்கு இழப்பீடுகள் வழங்கப்படுவதோடு, இத்தகைய கொடூரங்கள் மீள நிகழாத விதத்தில் விடயங்கள் உறுதிப்படுத்த வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரை இவ்விடயங்களில் பல்லாயிரம் பேர் கூண்டோடு காணாமலாக்கப்பட்ட விவகாரத்தில் உண்மைகள் கண்டறியப்பட்டு, பகிரங் கப்படுத்தப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட்டு, தவறு இழைத்தோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, பொறுப்பு கூறல் நிறைவேற்றப்பட்டு, இழப்பீடுகள் வழங்கப்பட்டு, மீள நிகழாமைக்கான பொறிமுறை உறுதி செய்யப்பட்டால் மட்டுமே காணாமலாக்கப் பட்டோர் விடயத்தில் சரியான தீர்வு கிட்டியதாக நம்ப முடியும்.