வடக்கு, கிழக்கு மட்டுமல்ல முழு இலங்கையும் தமது தாயகம்தான் எனக்கருதி இரண்டாவது சுதந்திர போராட்டத்துக்கு தமிழ் மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் தேசத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர்.
நாட்டு வளங்களை பாதுகாப்பதற்கான போராட்டமே 2ஆவது சுதந்திர போராட்டம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவரின் இந்த அறைகூவல் தொடர்பில் ஆழமானதொரு பார்வையை செலுத்த வேண்டும். நாட்டையும், வளங்களையும் காக்க வேண்டுமெனில் முதலில் இன ஐக்கியம் அவசியம்.
” வடக்கு, கிழக்கு தமது தாயகம் என தமிழ் மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கூறிவருகின்றனர். ஏன் இரு பகுதிகளை மட்டும் தாயகமாக கருத வேண்டும்? முழு நாடும் எமது என கூறுங்கள், அதற்கு நாம் எதிர்ப்பு இல்லை. நாம் அனைவரும் இலங்கையர்கள்.
யாழ். நாகதீப எமது பகுதி என நாம் உரிமைகோரவில்லையா? அதுபோல தமிழ் மக்களும் முழு இலங்கையும் தமக்கானது என எண்ண வேண்டும். இன்று எமது நாட்டு வளங்கள் சுரண்டப்படுகின்றன. தேசிய சொத்துகள் விற்கப்படுகின்றன. சொந்த நாட்டிலேயே வாடகைக்காரர்கள்போல் வாழ வேண்டிய நிலை எமக்கு. இந்நிலைமை மாற வேண்டும்,” எனவும் எல்லே குணவங்ச தேரர் குறிப்பிட்டார்.
இந்நாடு எமது சொத்து, அதற்கு நாம் சொந்தக்காரர்கள் என்ற எண்ணம் நாட்டு மக்களுக்கு வர வேண்டும். அப்போதுதான் எமது மரபுரிமைகளைக் காக்கலாம். வளங்களை காப்பதற்கான 2ஆவது சுதந்திர போராட்டத்துக்கு அனைத்து இன மக்களும் ஆதரவு வழங்க வேண்டும், ஒன்றிணைய வேண்டும். எமது அனைத்து தலைவர்களும் இணைந்துதான் சுதந்திரத்தை பெற்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது.
தொல்பொருள் என்பது ஒரு இனத்துக்குரியது அல்ல. ஒரு பழமையான ஆலயம் இருந்தால் அதனையும் அனைவரும் பாதுகாக்க வேண்டும். வடக்கு, கிழக்கில் உள்ள தொல்பொருட்களை பாதுகாக்குமாறு தமிழ் மக்களிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம். கடந்த 75 ஆண்டுகளாக தமிழரோ, சிங்களவர்களோ வெற்றிபெறவில்லை.
வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த ஸ்தானங்களில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன். வடக்கிலும், தெற்கிலும் உள்ள அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்குள் சிக்கிவிட வேண்டாம் எனவம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.” – எனவும் தேரர் குறிப்பிட்டார்.
அவரின் இந்த கருத்தில் தொல்பொருள் என்பது ஒரு இனத்துக்குரியது அல்ல என்ற விடயத்தை ஏற்க வேண்டும். அது நியாயப்பூர்வமான விடயமாகும்.
நாட்டில் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்பட்டுவந்த நிலையில், குருந்தூர் மலை உள்ளிட்ட தொல்லியல் பிரச்சினைகளால் மீண்டும் இன முரண்பாடு ஏற்பட்டுவிடுமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.
குருந்தூர் மலையை அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு முன்னால்கூட போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தவறான செய்தி வழங்கப்பட்டுள்ளது. தவறு இழைத்திருந்தால் தண்டிக்க சட்டம் உள்ளது. அதைவிடுத்து சிங்கள மக்களை உசுப்பேத்தும் வகையில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்ககூடாது.
அதேபோல் நாடாளுமன்ற சிறப்புரிமைக்குள் ஒளிந்துகொண்டு நீதித்துறையையும் விமர்சிக்கும் நிலை உருவாகியுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் இன நல்லிணக்கத்துக்கு குந்தகமாகவே அமையும்.
தொல்லியல் என்பது தேசத்துக்குரியது. அது எந்த இனத்தினதாக இருந்தாலும் அது நாட்டின் பெருமைக்குரிய விடயம். அதனை கட்டாயம் பாதுகாக்க வேண்டும். விஞ்ஞானபூர்வமான உறுதிப்படுத்தல்களை செய்வதைவிடுத்து, சொற்போரில் ஈடுபடுவது ஏற்புடையதாக அமையாது. அண்டை நாடான இந்தியா சத்தினின் தென் துருவத்துக்கே விண்கலம் அனுப்பும்போது, ‘அறிவியலை’ மறந்து, அற்ப விடயங்களுக்காக அடிபட்டுக்கொள்வது இயலாமையின் வெளிப்படையாகும். அறிவுப்பூர்வமாக செயற்படுவோம். தேசத்தை மேம்படுத்துவோம்.