” மலையகம் – 200″ தொடர்பில் தேசிய ரீதியில் மட்டும் அல்ல இன்று சர்வதேச பரப்பிலும் அதிகம் பேசப்படுகின்றது. எழுச்சி பயணங்கள், கலை, கலாசார நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றுவருகின்றன. மலையகத்தின் ‘வறுமை’ நிலை, ‘வலி’ சுமந்த வாழ்க்கை தொடர்பில் கருத்தாடல்கள் உருவாகியுள்ளன. ஆங்காங்கே மலையகத்தின் ‘பெருமை’ பற்றியும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. மலையகம் சம்பந்தமாக இவ்வாறு பலகோணங்களில் – பல விடயங்கள் பேசப்பட்டாலும் ‘காணி’ உரிமை அவசியம் என்ற கருத்தை அனைவரும் ஒருமித்த குரலில் வலியுறுத்தி வருகின்றமை முன்னேற்றகரமான திருப்பு முனையாக பார்க்கப்படுகின்றது.
இன்றைய 21 ஆம் நூற்றாண்டிலும் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நவீன அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர் என்பதற்கு அவர்கள் இன்னமும் நில உரிமையற்றவர்களாக வாழ்வதே சான்றாகும்.
ஒரு தனிநபரோ அல்லது சமூகமோ தலைநிமிர்ந்து வாழ வேண்டுமெனில் நில உரிமையென்பது அத்தியாவசியமாகும். அந்த உரிமை கிடைக்கப்பெற்றால் மாத்திரமே ‘வாழ்க்கை முறை’ முன்னேறும்.
மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் மலையக மாற்றம், மறுமலர்ச்சி பற்றி இன்றளவிலும் பேச்சுகள் அடிபடுகின்றன. லயன் யுகத்துக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற கோஷங்களும் எழுப்பட்டுவருகின்றன.
மேற்கூறப்பட்ட விடயங்களை அடைய வேண்டுமெனில் முதலில் நில உரிமை கிடைக்கப்பெற வேண்டும். அரசுதான் வீடுகளை அமைத்துதர வேண்டும் என காத்திருந்தால் அடுத்த நூற்றாண்டிலும் லயன் பற்றி பேசிக்கொண்டிருக்க வேண்டிய நிலையே ஏற்படும்.
எனவே, மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்கினால் அந்தமக்களில் 25 வீதமானோரால் நிச்சயம் தமக்கான தனியான இருப்பிடத்தை நிர்ணயித்துக்கொள்ள முடியும். ஏனையவர்களுக்கு அரசு, சலுகைக் கடன்களை வழங்கலாம். நிதியமொன்றை அமைத்தால் உதவிகளை வழங்குவதற்கு ஏராளமானோர் காத்திருக்கின்றனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்க பிரதான இரு கட்சிகளும் தேர்தல் விஞ்ஞாபனங்களில் உறுதியளித்தன. அதற்கு மக்களின் ஆணையும் கிட்டியது. எனவே, மலையக மக்களுக்கான காணி உரிமை பற்றியே தற்போது அதிகம் பேசப்பட வேண்டும்.
தமது பாட்டன், பூட்டன் இரத்தம், வியர்வை சிந்தி உழைத்து, காடாகக் காட்சி தந்த மண்ணை வளமாக்கியதுடன், தமது உடலைக்கூட மண்ணுக்கு உரமாக்கியிருந்தால்கூட இன்றைய தலைமைறையும்
வீடற்றவர்களாக, முகவரியற்றவர்களாக சொந்த மண்ணிலேயே அகதிகள்போல் வாழ்ந்துவருவது அடக்குமுறையின் உச்சகட்டமாகும். நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற விவாதத்தின்போது இந்த விடயமும் சுட்டிக்காட்டப்பட்டது.
தமக்கான மலசலகூடத்தை அமைப்பதற்குகூட தோட்ட நிர்வாகத்திடம் அனுமதிகேட்டு கைகட்டி நிற்கவேண்டிய நிலை தொடரும் நிலையில், இதற்கெல்லாம் முற்றுபுள்ளி வைக்கும் வகையில் அம்மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படாலேயே ‘மலையகம் – 200’ எனும் விழாவை நடத்துவது அம்மக்களை கௌரவப்படுத்துவதாக அமையும். மாறாக அடிமை தனத்துக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மலையகம் – 200 அமைந்துவிடக்கூடாது.
மலையக பெருந்தோட்ட மக்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு தேசிய ஆணைக்குழுவொன்று நிறுவப்பட வேண்டும் எனவும், அந்த ஆணைக்குழுவால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் காலத்துக்கு தேவையான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காபோன்ற நாடுகளில் மக்களுக்கு நீதி வழங்குவதற்கு உண்மை நல்லிணக்க ஆணைக்குழு நிறுவப்பட்டது. எனவே, தேசிய ஆணைக்குழுவொன்று நிறுவப்பட்டு, மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் ஆராய வேண்டும், மக்களிடம் கருத்துகளை பெற வேண்டும். ஏனைய ஆணைக்குழுக்களைபோல் காலம் கடந்தும் ஆணைக்குழுவாக இது அமையக்கூடாது. மாறாக கால எல்லை முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டு, காலக்கெடுவுடனேயே பணிகள் ஒப்படைக்கப்பட வேண்டும்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூறியதுபோல மலையக மக்களுக்கு தற்போது தேவைப்படுவது அனுதாபம் அல்ல, நீதி, நியாயம் – சமஉரிமை. அதனை வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும். அதற்கு சஜித் முன்வைத்துள்ள யோசனை சிறந்த பொறிமுறையாக அமையும். மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இனியும் வறுமை பற்றியே பேசாமல், அவர்களின் பெருமைகள் பற்றியும் பேசும் யுகம் மலர வேண்டும்.
காணி உரிமைக்கான அஞ்சலோட்டம்
மலையக மக்கள், சிவில் அமைப்புகள் – குறிப்பாக மாண்புமிகு மலையகம் அமைப்பு, இளைஞர்கள் இணைந்து முதல் சுற்றை வெற்றிகரமாக ஆரம்பித்து வைத்துள்ளனர். (மலையக எழுச்சி பயணங்கள்)
காணி உரிமையை வென்றெடுப்பதற்கான இந்த அஞ்சல் ஒட்டத்தின் இரண்டாம் சுற்று அமைச்சரவைக்குரியது. எனவே, அமைச்சரவையில் உள்ள ஜீவன் தொண்டமான் இதற்கு தலைமையேற்று , துரிதமாக செயற்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
(காணி உரிமை தொடர்பில் திட்ட வரைவை தயாரிக்கும் பொறுப்பு காணி, தொழில், பெருந்தோட்டத்துறை, தோட்ட உட்கட்டமைப்பு என நான்கு அமைச்சுகளின் செயலாளர்களிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது.)
அமைச்சரவையின் ஒப்புதலின் பின்னர் அது சட்டமூலமாக நாடாளுமன்றம் வந்தால், அதனை வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொள்வதற்கான பொறுப்பை தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்கலாம். அஞ்சல் ஓட்டத்தின் மூன்றாவது சுற்று. மிகவும் முக்கியமான இறுதி சுற்று.
எனவே, இந்த மூன்று தரப்புகளும் அக்கறையுடன் – பொறுப்புணர்வுடன் ஓடினால்தான் இலக்கை அடையலாம். ஒரு தரப்பை, மற்றுமொரு தரப்பு காலைவார முற்பட்டால் இறுதியில் தோல்விதான் ஏற்படும்.
ஆர்.சனத்