ஜனநாயகத்தின் நான்காவது தூணாகவுள்ள ஊடகங்கள் இலங்கையைப் பொறுத்தவரையில், அரசியலமைப்பில் குறித்துரைக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்து வெளியிடும் சுதந்திரத்திற்கு அளிக்கப்பட்டுள்ள வரைமுறைகளின் கீழேயே செயற்படுகின்றன.
அவ்வாறு செயற்படும் ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கு வௌ;வேறு வகையான பல சட்டங்கள் காணப்படுகின்றன. உதாரணமாக கூறுவதாயின், தேசிய பாதுகாப்புச் சட்டங்கள், பயங்கரவாத தடுப்புச் சட்டம் உள்ளிட்டயை சுட்டிக்காட்டலாம்.
இவ்வாறான சட்டரீதியான முட்டுக்கட்டைகள் இருக்கின்ற நிலையில் அரசாங்கம் தற்போது புதிய சட்டமொன்றை ஊடகங்களை மையப்படுத்தி உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்கு பிரதான காரணம், அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பான விமர்சனங்களை முழுமையாக முடக்குவதாகும். குறித்த சட்டம் அமுலாகும் பட்சத்தில், மக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தினை கட்டுப்படுத்தமுடியும் என்பதோடு ஒன்றுகூடல்கள் உள்ளிட்ட அனைத்தையும் முடக்குவதற்கு இயலுமானதாக இருக்கும். தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளும் முழுமையாக முடங்கும்.
இதனால் பிரஜைகளின் சிந்திக்கும், பிரதிபலிக்கும் செயற்பாடுகள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு வெறுமனே அசாங்கத்தின் அனைத்து விடயங்களையும் அனுமதிக்கும் தலையாட்டிகளாகவே இருக்க வேண்டிய நிலைமைகள் உருவாகவுதற்கு எத்தனிக்கப்படுகின்றது.
‘ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு’ என்ற பெயரில் புதிய சட்டமூலமொன்றை கொண்டுவருவதற்காக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி.விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கின்றது.
குறித்த உபகுழுவில் அமைச்சர்களான நிமல் சிறிபால டிசில்வா, கெஹலிய ரம்புக்வெல, பந்துல குணவர்த்தன, மனுஷ நாணயக்கார உள்ளிட்டவர்கள் அங்கத்துவத்தினை வகிக்கின்றார்கள். இவர்களுக்கு எல்லாம் தலைவராக இருப்பவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
ஆறு தடவைகள் பிரதமர் பதவியை வகித்திருப்பதோடு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஒருகாலத்தில் இருந்த ‘ஜனநாயக’ அரசியல்வாதி அவர்.
இத்தகையதொரு பின்புலத்தினைக் கொண்டவர்களின் துணையுடன் தான் ‘ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு’ சட்டமூலம் தயாரிக்கும் செயற்பாடுகள் நிறைவுக்கு வந்திருக்கின்றன.
இருப்பினும், ஊடகங்களின் ஒளிபரப்புக்கான நிரந்தரமான சான்றிதழ் இன்மை, கொள்கை அடிப்படையில்லை, ஊடக தரம் உறுதி செய்யப்படவில்லை இதனால் ஊடக அமைச்சின் கோரிக்கைக்கு அமைவாகத் தான் ‘புதிய பிரேரணை’ (உத்தேச சட்டமூலம் அல்ல) தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறுகின்றார் அமைச்சர் விஜயதாச.
அவருடைய கூற்று பொதுப்படையில் அவ்வாறிருந்தாலும், இச்சட்டமூலத்தின் உள்ளடக்கமானது வெறுமனே ஜனநாயகத்தின் நான்காவது தூணாகவுள்ள ஊடகங்களை மட்டும் இலக்குவைக்கவில்லை. மாறாக, 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 14ஆவது உறுப்புரை ஊடாக உள்ளீர்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பறித்தெடுப்பதாகவே உள்ளது.
தகவல்களை வெளியிடுகின்ற ஊடகங்களை அடக்குவதன் ஊடாக, சாதாரண பொதுமக்கள் தகவல்களை தெரிந்து கொள்வதற்கும், சிந்திப்பதற்கும், தீர்மானிப்பதற்கும் அதன்பிரகாரம் பிரதிபலிப்பதற்கும் கொண்டிருக்கின்ற உரித்துக்கள் முழுமையாக பறித்தெடுக்கப்படவுள்ளன.
மக்கள் சிந்திக்காது, தீர்மானம் எடுக்காது நிறைவேற்றுத்துறையின் தலைமை எடுக்கின்ற அனைத்துத் தீர்மானங்களுக்கும் இசைந்து போகின்ற நிலைமையானது, ஜனநாயகத்தினை குழிதோண்டிப் புதைப்பதோடு, மக்களாட்சித் தத்துவத்திற்கும் எதிர்மாறானதாகும்.
அதாவது, ஏதேச்சதிகார ஆட்சியை தோற்றுவிப்பதற்கான வழிகோலலைச் செய்வதாகும். அந்த அடிப்படையில், பொருளாதார மீட்சியை மையப்படுத்திச் செயற்படும் தற்போதைய அரசாங்கத்தின் இலக்கு அடக்குமுறைகள் நிறைந்த சர்வாதிகார ஆட்சியா என்ற கேள்வியை ஏற்படுத்துகின்றது.
தயாரிக்கப்பட்டுள்ள ‘ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு’ சட்டமூலத்திற்கான அடிப்படை வரைபின் பிரகாரம்,
குறித்த ஆணைக்குழுவிற்கு ஐவர் அங்கத்தவர்களாக நியமிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறித்த பரிந்துரைக்கு அமைவாக, நியமிக்கப்படும் ஐவரில் ஊடகத்துறை அமைச்சின் செயலாளரும், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமும் பதவிகள் அடிப்படையில் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களாக நியமிக்கப்படும் அதேவேளையில், ஏனைய மூன்று உறுப்பினர்களும் அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்படுகின்ற ஐந்து உறுப்பினர்களில் ஒருவரை தலைவர் பதவிக்கு நியமிக்கும் அதிகாரம் நேரடியாக நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியிடமே வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையானது, ஜனாதிபதி என்ற தனி நபரின் தாளத்திற்கே ஆணைக்குழுவும் ஆடப்போகின்றது என்பதை வெளிப்படையாக உணர்த்துகின்றது.
தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு அமைவாக அமைதிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒளிபரப்பு சேவைகள் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கான பொறுப்பு ஆணைக்குழுவிடத்தல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்தோடு, தேசிய பொருளாதாரத்திற்கு அழுத்தம் ஏற்பாடாத வகையில், ஒளிபரப்பு சேவைகளை பேணிச் செல்வதும் அதன் பொறுப்பாகும்.
இதில் ஊடகங்களை சேவை வழங்குநராக ஏற்றுக்கொள்ளும் அரசாங்கம், உரிய பொருள்கோடல்களைச் செய்யாது, வரையறைகளற்ற தேசிய பாதுகாப்பு, தேசிய பொருளாதாரம் ஆகியவற்றை மையப்படுத்தி தமக்கு வேண்டிய விடயங்களை மட்டுமே வெளியிடுவதற்கு அனுமதிப்பதை திரைமறைவில் நோக்காக கொண்டிருக்கின்றமை புலனாகின்றது.
ஊடகங்கள் மக்களுக்கு உண்மையான மற்றும் சரியான தகவல்கள் பெற்றுக்கொடுக்கப்படுவதையும் ஆணைக்குழு உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஊடகமொன்று பொதுமக்கள் நன்மை கருதியும், தகவல் மூலத்தின் பாதுகாப்பு கருதியும் வெளியிடப்படும் செய்தியை ஆணைக்கு தவறானது என்று கருதினால் அச்செய்தியை வெளியிட்ட ஊடகத்தின் மீது நடவடிக்கையை எடுக்க முடியும்.
அத்துடன், அரசாங்கத்திற்கு எதிரானதொரு செய்தியை குறித்த ஆணைக்குழு தவறானது என்றும் குறித்துரைக்கலாம். அவ்வாறான நிலைமைகள், ஊடகங்களை தணிக்கை நிலைமைக்குள் கொண்டு செல்வதாகவே இருக்கும்.
ஒளிபரப்பு அனுமதிப்பத்திரம் விநியோகிக்கும் அதிகாரத்தையும் இலத்திரனியல் ஒளிபரப்பு சேவை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தையும் ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ளமையால் அரசாங்கம் தமக்கு வேண்டாத நபர்களாக கருதுபவர்களுக்கு அனுமதிகளை இலவாக மறுதலிக்கும் நிலைமையே நீடிக்கவுள்ளது.
சமூக, கலாசார பெறுமதிகள் பாதுகாக்கப்படும் வகையில், மக்கள் மத்தியில் உளநல, ஆன்மீக பண்புகளை மேம்படுத்துவதற்காக வழிகாட்டுதல்களையும், அனுமதிப்பத்திரமுடைய ஒளிபரப்பாளர்களுடன் கலந்துரையாடி ஒழுக்கக்கோவையொன்றை தயாரிக்கும் அதிகாரமும் ஆணைக்குழுவிற்கே உரித்தாக இருக்கின்றது.
இந்நிலையானது, ஆட்சியில் உள்ளவர்கள் தமது வாக்குவங்கிகளை மையப்படுத்திய ஊடகப்பிரசாரங்களுக்கு வழிசமைப்பதோடு, ஒழுக்கக் கோவையானது பரந்துபட்ட வெளிப்படைத்தன்மையுடன் அமையும் என்பதும் கேள்விக்குள்ளாகின்றது.
குறித்த ஆணைக்குழுவில் ஒளிப்பரப்பாளர்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு நியமிக்கப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதோடு அந்த விசாரணைக்குழுவில் ஒளிரப்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், பதவி அடிப்படையில் உள்வாங்கப்படுவதுடன் ஊடக, சட்டத்துறையின் இரண்டு நிபுணர்கள் ஆணைக்குழுவாலேயே நியமிக்கப்படவுள்ளனர்.
விசாரணைகளுக்கான அங்கத்தவர்கள் ஆணைக்குழுவிலிருந்தும், ஆணைக்குழுவாலும் நியமிக்கப்படுகின்றபோது பக்கச்சார்பற்றதன்மை, வெளிப்படைத்தன்மை என்பன தொடர்பில் சிந்தித்தும் பார்க்க முடியாத நிலைமையே உருவாகும் ஆபத்தான நிலைமைகளே உள்ளன.
மத, இன ரீதியிலான மோதல்களுக்கு காரணமாக அமையும், தேசிய பொருளாரத்திற்கு அழுத்தம் ஏற்படுத்தும், தேசிய பாதுகாப்பில் தாக்கம் செலுத்தும் செயற்பாட்டை ஒளிபரப்பு அனுமதிப்பத்திரமுள்ள ஒருவர் மேற்கொண்டால், முறைப்பாடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் விசாரணையை ஆரம்பிக்கும் அதிகாரம் விசாரணைக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த விசாரணைகுழுவின் விசாரணையின்போது குழுவினால் கோரப்படுகின்ற எந்தவொரு ஆவணத்தையும் வாய்மூல விளக்கத்தையும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வழங்குவதற்கு ஒளிபரப்பாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நீதிவான் ஒருவரது தேடுதல் கட்டளைக்கு அமைய அலுவலக நேரத்தில் ஒளிபரப்பு சேவைக்கு சொந்தமான எந்தவொரு வளாகத்திற்குள்ளும் பிரவேசித்து அனைத்து ஒளி-ஒலிப் பதிவுகள், ஆவணங்களை கைப்பற்றுவதற்கான அதிகாரத்தை விசாரணைக்குழுவிற்கு வழங்க வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுநேரடியாகவே, செய்தி மூலங்கள் இலக்கு வைக்கப்படுவதற்கும், அவை அழிக்கப்படுவதற்கும் வித்திடுவதாக உள்ளது.
விசாரணைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய, இலத்திரனியல் ஊடக அனுமதிப் பத்திரத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இரத்து செய்வதற்கு, தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அல்லது அபராதம் விதிப்பதற்கான இயலுமை ஆணைக்குழுவிற்கு உள்ளது.
இந்த அதிகாரமானது, அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாடுகளை, விமர்சனங்களை முடக்கும் செயற்பாடாக இருப்பதோடு, அவ்விதமான வற்றின் தோற்றுவாய்களை மௌனிக்கச் செய்வதை நோக்காகக் கொண்டது.
ஆணைக்குழுவின் உத்தரவுகள் அல்லது அதன் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தவறினால் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து விசாரணையின் பின்னர் அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது குறித்த இரண்டையும் விதிப்பதற்கான அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஒளிபரப்பு, ஒலிபரப்பு சேவை விநியோகத்தர், அனுமதிப் பத்திரம், அனுமதிப்பத்திரமுடையவர் என்ற விடயங்களுக்கான பொருட்கோடல்கள் இடம்பெறவில்லை. இவ்வாறான நிலையில் இவ்விடத்தினை பரந்துவிரிந்த பகுதியாக வைத்துக்கொண்டு தேவையான நேரத்தில் தலையீடுகளைச் செய்ய முடியும். இவ்விதமான உள்ளடக்கங்களை கொண்ட ‘ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு’ சட்டமூலத்தினை கொண்டுவருவதற்கு முயற்சிப்பது இதுதான் முதற்தடவை அல்ல.
1997ஆம் ஆண்டு அன்றைய சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையிலா அரசாங்கத்தினால் இதையொத்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டபோது காமினி அத்துக்கோரள சவாலுக்கு உட்படுத்தினார். அதன்போது, உயர்நீதிமன்றம் அனைத்து சரத்துக்களும் அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதாக சுட்டிக்காட்டியதோடு, சர்வஜனவாக்கெடுப்பிற்கும் பரிந்துரைத்துரைத்தது.
அவ்வாறு இதையொத்த சட்டமூலத்திற்கான நீதித்துறையின் தீர்மானம் வரலாற்றில் பதியப்பட்டு இருக்கின்போது மீண்டும் அவ்வகையான சட்டமூலத்தினைக் கொண்டுவருவதற்கு முனைவதானது, திட்டமிட்ட ஜனநாயகப் பறிப்பாகும்.
