” புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ள ஏற்பாடுகளில் இரு விடயங்கள் தொடர்பில் திருத்தங்கள் அவசியம்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ள இரு ஏற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஒன்று ‘பயங்கரவாதம்’ தொடர்பில் உரிய அர்த்தப்படுத்தல் அவசியம்.
2ஆவது விடயம், தடுப்பு உத்தரவு (டீஓ) என்பது பாதுகாப்பு அமைச்சரின் அதிகாரத்துக்கு வெளியில், பொலிஸ் அதிகாரியிடம் செல்வது ஏற்புடைய விடயம் என கட்சி கருதவில்லை. ஏனெனில் சில பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி உள்ளது. சிலவேளை ஒரு அதிகாரி இதனை தவறாக பயன்படுத்தினால்கூட அது ஒட்டுமொத்த சட்டத்தின் பெறுமதியையும் சவாலுக்குட்படுத்தும்.
பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியிடம் அந்த அதிகாரம் இருந்தால், ஜனாதிபதி மக்களுக்கு பொறுப்புகூறவேண்டியவர். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மக்கள் நீதிமன்றம் முன் வரவேண்டும்.” – என்றும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.
