” புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பரந்தப்பட்ட கலந்துரையாடல் அவசியம். எனவே, சட்டமூலம் முன்வைக்கப்படுவதில் தாமதம் ஏற்படக்கூடும்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே எஸ்.பி. திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
” புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்னமும் முன்வைக்கப்படவில்லை. எது எப்படி இருந்தாலும் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டு மக்கள், ஜனநாயகம், வளங்களை பாதுகாக்கும் விடயங்களை மையப்படுத்திய
சட்டமூலத்துக்கே ஆதரவு வழங்கப்படும். கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலான விடயங்களுக்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது.
மேற்படி சட்டமூலம் தொடர்பில் சிவில் அமைப்புகள் மற்றும் எதிரணிகளுடன் கலந்துரையாடல்கள் அவசியம். அதேபோல நீதிமன்ற நடவடிக்கையும் அவசியம். எனக்கு தெரிந்த மட்டத்தில் இச்சட்டமூலம் வருவதற்கு தாமதம் ஆகக்கூடும்.
நாட்டில் ஆளுங்கட்சி பலம் எம்மிடம்தான் உள்ளது. மக்களையும், நாட்டு வளங்களையும் பாதுகாக்கும் விடயத்தை அடிப்படையாக கொண்டதற்கே எமது ஆதரவு இருக்கும். ” – எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டார்.
