You are currently viewing

” புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் நீதி அமைச்சருக்கே நம்பிக்கையில்லாத நிலை காணப்படுகின்றது. எனவே, நிபுணர்கள் குழுவொன்றை அமைத்து அச்சட்டமூலத்தை மீளாய்வுக்கு உட்படுத்தி ஜனநாயகத்துக்கு பங்களம் விளைவிக்காத வகையில் முன்வைக்க நடவடிக்கை எடுக்கவும்.”

இவ்வாறு ஆளுங்கூட்டணியின் பிரதான பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தனி மனித சுதந்திரத்துக்கும், ஜனநாயக உரிமைகளுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் எந்தவொரு சட்டமூலத்தையும் தமது கட்சி ஆதரிக்காது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மொட்டு கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  

“ புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் சமூகத்தில் தற்போது கருத்தாடல் உருவாகியுள்ளது. நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் உள்ள சில ஏற்பாடுகள், ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல என சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையிலேயே, புதிய சட்டமூலத்தை முன்வைப்பதற்கான யோசனை பிரேரிக்கப்பட்டது.

இச்சட்டமூலம் இன்னும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை. அவ்வாறு முன்வைக்கப்பட்ட பின்னர் அவற்றின் உள்ளடக்கம் பற்றி ஆழமாக ஆராய வேண்டும். எனினும், தற்போது எமக்கு தெரிந்த விடயங்களின் அடிப்படையில், இச்சட்டமூலம் தொடர்பில் எமது கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகின்றோம்.

முதலாவது விடயம்தான், மக்களின் அடிப்படை உரிமையான கருத்து சுதந்திரத்துக்கு தடையாக – இடையூறாக  அமையும் எந்த சட்டமூலத்துக்கும் நாம் இணக்கம் தெரிவிக்கமாட்டோம்.

இரண்டாவது, ஜனநாயக வழியில் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு மக்களுக்கு உள்ள உரிமைக்கு அச்சுறுத்தலாக விளங்கும் எந்தவொரு சட்டமூலத்துக்கும் நாம் ஆதரவு இல்லை.

எல்லா செயற்பாடுகளையும் ‘பயங்கரவாதம்’ என வரைவிலக்கணப்படுத்தக்கூடிய வகையில் இருந்தால் அது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதாக அமையாது.. எனவே, ‘பயங்கரவாதம்’ என்ற வரைவிலக்கணம் தொடர்பில் ஒரு எல்லை அவசியம்.

அதேவேளை, இச்சட்டமூலத்தை கொண்டுவந்துள்ள நீதி அமைச்சருக்கே, சட்டமூலம் தொடர்பில் நம்பிக்கையற்ற நிலையே காணப்படுகின்றது. எனவே, நிபுணர்கள் குழுவொன்றை அமைத்து, சட்டமூலம் தொடர்பில் மீளாய்வு செய்து, ஜனநாயகத்துக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் சட்டமூலமொன்றை கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றோம்.  ஏனெனில் அரசால் முன்வைக்கப்படும் சட்மூலம் தொடர்பில் முதலில் அரசுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். “ – எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

Leave a Reply