” புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு சர்வதேச மட்டத்திலிருந்து எந்தவொரு எதிர்ப்பும் வெளியாகவில்லை. ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.” – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது சற்று பிற்போடப்படுகின்றது. ஆய்வுக்காக காலம் அவசியம் என சட்டத்தரணிகள், எதிர்க்கட்சி பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் விடுத்த கோரிக்கையின் பிரகாரம்தான் இவ்வாறு பிற்போடப்படுகின்றது. எனினும், ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் சட்டமூலம் சபையில் முன்வைக்கப்படும்.
சட்டமூலம் முன்வைப்பதற்கு முன்னர், நாடாளுமன்றத்தில் கலந்துரையாடல் அவசியம் என எதிரணிகள் கோரிக்கை விடுத்தன. இதன்படி ஏப்ரல் 25 ஆம் திகதி துறைசார் மேற்பார்வைக்குழு கூட்டத்தின்போது விவகாரம், விவாதத்துக்கு எடுக்கப்படும்.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் தொழிற்சங்கவாதிகள்,சமூக செயற்பாட்டாளர்களுக்கு பாதிப்பு இல்லை. மக்களை பாதுகாக்கவே சட்டமூலம் வருகின்றது.” எனவும் நீதி அமைச்சர் கூறினார்.
