You are currently viewing

” மக்களின் பாதுகாப்பு, ஊடக பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமொன்று அவசியம். அதற்கேற்ற வகையிலேயே புதிய சட்டம் அமையுமென நம்புகின்றேன். மக்களின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலெனில்  அதனை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரிக்காது.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று (03)  நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.  

 ” மக்களின் பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு, ஊடகங்களின் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்தக்கூடிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்று அவசியமென்ற நிலைப்பாட்டிலேயே எமது கட்சி இருக்கின்றது.

புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலத்தின் உள்ளடக்கங்கள் எனக்கு தெரியாது. அது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறுகின்றது. ஜே.வி.பி. உட்பட பயங்கரவாத செயலில் ஈடுபட எத்தனிக்கும் நபர்களுக்கு இத்தகைய சட்டம் வலிக்கும்.  அத்தகையவர்களே போலி பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றன.

சில சமூக ஊடகங்கள் நபர்களை கொல்லாமல் கொல்கின்றன. எனவே, மக்களுக்கு பாதுகாப்பு அவசியம். சட்டம் நாடாளுமன்றம்வரும்வரை காத்திருங்கள்.  ஜனநாயகம் மற்றும் அரசமைப்புக்கு எதிரெனில் அதனை சட்டரீதியில் சவாலுக்குட்படுத்த முடியும். காரணிகளை மாற்றலாம். அதில் பிரச்சினை கிடையாது.

மக்களின் பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கை நிலைநாட்டல், ஊடக பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்தக்கூடிய சட்டமொன்றையே எமது கட்சி எதிர்பார்க்கின்றது.

சட்டமூலத்தில் உள்ள சிறந்த அம்சங்களை ஆதரிப்போம். குறித்த சட்டமூலம் மக்களுக்கு எதிரானது – ஊடகங்களுக்கு எதிரானது – மக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்கு அச்சுறுத்தல் எனில் அதற்கு ஆதரவளிக்கமாட்டோம். இந்த கருத்தை பொறுப்புடனேயே கூறுகின்றேன்.” – எனவும் எஸ்.பி. குறிப்பிட்டார்.

Leave a Reply