புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலமானது ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
கண்டிக்கு நேற்று சென்றிருந்த பிரதமர் தலதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இந்த தகவலை வெளியிட்டார்.
” புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலம் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னரே சட்டம் நிறைவேற்றப்படும்.
ஏப்ரல் 4 ஆம் திகதிக்கு பிறகு ஏப்ரல் 3ஆவது வாரத்தில்தான் நாடாளுமன்றம்கூடும். இதன்போது மேற்படி சட்டமூலம் நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் உள்ளடக்கப்படும்.” – எனவும் பிரதமர் கூறினார்.
தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
” படுமோசமான புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு இடமளிக்கமாட்டோம். அச்சட்டமூலத்தை மண்கவ்வ வைப்பதற்கு எல்லா வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.”
இவ்வாறு தொழிற்சங்க மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டமைப்பு சூளுரைத்துள்ளது.
தொழிற்சங்க மற்றும் வெகுஜன அமைப்புகளின் பிரதிநிதிகள் கொழும்பில் நேற்று ஒன்றுகூடினர்.
இதன்போது அரசின் முறையற்ற வரிவிதிப்பு விவகாரம், புதிய பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.
இதன்படி எதிர்வரும் 3 ஆம் திகதி கொழும்பில் மீண்டும் கூடுவதெனவும், இதன்போது அடுத்தக்கட்ட நகர்வுகள் பற்றி முடிவெடுக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள்,
” தனிமனித சுதந்திரம், கருத்து சுதந்திரம், போராடும் சுதந்திரம் என எல்லாவற்றுக்கும் புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலம் அச்சுறுத்தலாக உள்ளது. அதற்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும். குறித்த சட்டமூலத்தை நிறைவேற்ற இடமளிக்கப்படமாட்டாது. இதற்கான முதல் வேட்டு 3 ஆம் திகதி கொளுத்தப்படும்.” – என்றனர்.
