இலங்கை முன்னோக்கி செல்ல வேண்டுமானால் தேசிய இணக்கப்பாடு அவசியம். அந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள கட்சிகள் முன்வர வேண்டும் – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” இலங்கையில் இனியும் தனிக்கட்சி ஆட்சிமுறை ஏற்புடையதாக இருக்காது. எந்த கட்சியாக இருந்தாலும் நிலைமை இதுதான். தேசிய இணக்கப்பாடு இருந்தால் மட்டுமே இலங்கையால் ஆசியாவில் சிறந்த நிலைமைக்கு வர முடியும். அவ்வாறு இல்லாமல் அரசியல் நோக்கி செயற்பட்டால் கீழ்நோக்கிதான் செல்ல வேண்டும். ” – எனவும் வஜிர குறிப்பிட்டார்.
” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலகத் தலைவர். அவர் எமது நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து. இன்னும் 12 ஆண்டுகள்வரை அவரிடம் ஆட்சியை ஒப்படைத்தால் இலங்கை சிறந்த நிலைக்கு வரும். இதை மக்கள் தற்போது புரிந்துகொண்டுள்ளனர். குறுகிய காலப்பகுதிக்குள் ரணில் விக்கிரமசிங்க பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் அல்ல, நாட்டை மீட்டெடுப்பதே முக்கியம். அதற்கான வேலைத்திட்டங்களே முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, காலைவாரும் அரசியலை செய்யாதிருந்தால் ஜனாதிபதி நிச்சயம் எமது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வார்.” – எனவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.
