மக்களால் தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற தேர்தல் மூலம் மாத்திரமே அரசாங்கத்தை மாற்ற முடியும் என்றும் வீதிகள் அதற்கு மாற்றுவழியல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் விரைவில் சாதகமான முடிவுகள் கிடைக்கவுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி. பொருளாதார வீழ்ச்சியின் ஊடாகவும் நாடுகள் அராஜக நிலைக்கு மாறும் என்றும், எனவே ஒரு நாட்டின் அரசியலமைப்பைப் போன்று, பொருளாதாரத்தையும் ஒருசேர பாதுகாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் கூறினார்.
திருகோணமலை விமானப்படை தளத்தில், இன்று (03) முற்பகல் இடம்பெற்ற விமானப்படைக்கு தெரிவான கெடட் உத்தியோகத்தர்கள் பயிற்சி பெற்று வெளியேறும் அணிவகுப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.
“ இன்று நீங்கள் அதிகாரிகளாகும்போது, அரசியலமைப்பை நிலைநிறுத்துவதாக சத்தியப்பிரமாணம் செய்தீர்கள். விமானப் படையின் பதவிப் பிரமாணமும் செய்து கொண்டீர்கள். இந்த இரண்டு பிரமாணங்களிலும் குறிப்பிடப்பட்டிருப்பது உங்களின் முதன்மையான கடமை மற்றும் பொறுப்புமாகும்.
அரசியலமைப்பைப் பாதுகாப்பதும், நாட்டைப் பாதுகாப்பதும் உங்கள் பொறுப்பாகும். ஏனெனில் நாடு இல்லாமல் அரசியலமைப்பு இல்லை. ஒரு நாடு இல்லாமல், அரசியலமைப்பு வெறும் காகிதத் துண்டாகவே இருக்கும். ஒரு நாடு இருப்பதாலேயே அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. நீங்கள் அளித்த சத்தியப் பிரமாணத்தின்படி, இந்நாட்டு அரசியலமைப்புக்கும், சட்டத்திற்கு உட்பட்டு செயல்படவும், குடியரசிற்கு விசுவாசமாகச் செயல்படவும் உறுதியளித்துள்ளீர்கள்.
நமது நாட்டின் அரசியலமைப்பின் முதல் சரத்து “இது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால், அரசியலமைப்பு இருப்பது குடியரசுக்காகத்தான். நாட்டின் ஒற்றையாட்சி பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அத்தியாயம், மக்கள் இறையாண்மையை செயல்படுத்தும் நிறுவனங்கள், தேசியக் கொடி மற்றும் நமது தேசிய கீதம் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. மற்ற அனைத்து அத்தியாயங்களும் இவற்றைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்லவே உள்ளன. அப்படியானால், நாம் அதன்படி செயல்பட வேண்டும். முதலில் நாட்டை பாதுகாக்க வேண்டும். அதற்கு நாம் ஒரு இறையாண்மை, சுயாதீனமான சுதந்திர நாடாக இருக்க வேண்டும்.
இறையாண்மை, சுயாதீனமான சுதந்திர நாட்டை அச்சுறுத்தும் வகையில் எதுவும் நடக்க இடமளிக்கக்கூடாது. அது நமது முக்கிய கடமை. அங்கு நாட்டின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க, இந்த நாட்டின் பிரதேச ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டின் பிரதேச ஒருமைப்பாடு 1980 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அச்சுறுத்தலுக்கு உள்ளானது. அச்சந்தர்ப்பத்தில் முப்படையினரும் பொலிஸாரும் உயிர்த் தியாகம் செய்து அதனைப் பாதுகாத்தனர்.
ஒற்றையாட்சியைப் பாதுகாக்க வேண்டுமானால் நாட்டு மக்களின் ஐக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும்.
நாடு என்ற வகையில் நாம் ஒரு தனியாக எழுந்து நிற்க வேண்டுமாயின், இந்த நாட்டில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம், பர்கர் போன்று, அனைத்து மதத்தினரும் இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். நாம் அனைவரும் நமது கலாசாரத்தையும் மதத்தையும் பாதுகாக்க வேண்டும். அவ்வாறில்லாமல் நாடு பிளவுபட்டால் அது நாட்டின் ஒற்றையாட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
அதேபோன்று, நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை, நீதித்துறை என்ற நிறுவனங்களினால் இலங்கையின் சட்டபூர்வ தன்மை நிறுவப்பட்டுள்ளது. சட்டத்துறை இயற்றும் சட்டங்களை நடைமுறைப்படுத்த நீதித்துறை செயல்படுகிறது. இந்த அனைத்து நிறுவனங்களாலும் இலங்கையின் அரசியலமைப்பைப் பாதுகாப்பது தொடர்பான விடயங்கள் நடைபெறுகின்றன. எனவே, இந்த நிறுவனங்களைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும்.
ஒரு அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்தால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறது அல்லது மாற்றப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தல் இல்லாமல் ஆட்சி மாற்றம் சாத்தியமில்லை. வீதிகள் என்பது பாராளுமன்றத்திற்கான மாற்றுவழியல்ல.” -எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
