” மீளப்பெற முடியாத சமஷ்டி அடிப்படையிலான ஆட்சிமுறைமையே எமக்கு வேண்டும். அதனை வலியுறுத்தியே தமிழ் தேசியக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களித்துவருகின்றனர். சமஷ்டியால் நாடு பிளவுபடும் என்ற கருத்து தவறானது”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான த. சித்தார்த்தன் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் கூறினார்.
” அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி கூறியுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 13 ஆவது திருத்தச்சட்டத்தை கொளுத்தி பிக்குகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
13 இன் பிரகாரம் உருவான மாகாணசபையில் ஆளுநர் பதவியை வகிக்கும் கிழக்கு ஆளுநர்கூட 13 இற்கு எதிராக கருத்து வெளியிடுகின்றார். அரசமைப்பில் உள்ள ஒரு விடயத்தை அமுலாக்க வேண்டாம் என உலகில் வேறு எங்கும் இப்படி கூறமாட்டார்கள்.” – எனவும் சித்தார்த்தன் சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசின் தலையீடு இன்றி, எங்களை நாங்களே ஆளக்கூடிய சமஷ்டி கட்டமைப்பிலான தீர்வையே தமிழ் மக்கள் கோரிவருகின்றனர். 1956 முதல் இன்றைவரை அதற்காகவே வாக்களித்துவருகின்றனர்.
சமஷ்டியால் நாடு பிளவுபடும் எனக் கூறுகின்றனர். அதற்கான அடிப்படை தத்துவம் என்னவென்று தெரியவில்லை. ஒற்றையாட்சி அமுலில் இருந்தபோதுதான் ஆயுதப்போராட்டம்கூட முன்னெடுக்கப்பட்டது.” – என்றார் சித்தார்த்தன்.
