அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டமென்பது சர்வதேச உடன்படிக்கையாகும். அதனை அமுல்படுத்த வேண்டியது அரசின் கடப்பாடாகும். எனவே, 13 விரைவில் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஹட்டனிலுள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டமென்பது நாட்டின் அரசமைப்பில் இருந்தாலும், அது இன்னும் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. பொலிஸ், காணி அதிகாரங்கள் தொடர்பில் போலியான விம்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவது வடக்கு, கிழக்குக்கு மட்டும் அல்ல, 9 மாகாணங்களும் அதன்மூலம் பயன்கிட்டும். எனவே, தமிழர்களுக்கு எதிரான சில சக்திகளே 13 தொடர்பில் போலி பிரச்சாரத்தை முன்னெடுத்துவருகின்றன. இவற்றை அரசு கருத்திற்கொள்ளாது, சர்வதேச உடன்படிக்கையான 13 ஐ அமுல்படுத்த வேண்டும்.
லண்டன், மலேசியா போன்ற நாடுகளில் உள்ளாட்சிசபைகளுக்கு உள்ள அதிகாரங்கள்கூட, எமது நாட்டில் உள்ள மாகாணசபைகளுக்கு இல்லை.” எனவும் ராதா வலியுறுத்தினார்.
