You are currently viewing உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவ இராணுவம் இணக்கம்!

உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவ இராணுவம் இணக்கம்!

அனைத்து மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்த்து அனைவரும் ஒன்றிணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் துர்கா மண்டபத்தில் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்ற தேசிய தைப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

” நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசு முன்னெடுக்கும் நடவடிக்கை குறித்த அறிக்கையை பெப்ரவரி மாதம் நாட்டுக்கு வெளியிடவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அடுத்த வாரம் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும்.”  என்றும் தெரிவித்தார்.

 காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உண்மையைக் கண்டறியும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகள் துரிதப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

”  எமது நாட்டுக்கு நல்லிணக்கம் அவசியமானது. 30-40 வருடங்களுக்கு மேலாக யுத்தம், மோதல்கள்.குழப்பங்கள் மற்றும் பிரிவினைவாத ,இனவாத வங்குரோத்து அரசியல்களினால் நாடு பிரிந்திருந்தது. நாம் ஒரே நாட்டில் வாழ வேண்டும். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டும். அதற்காக 75 வருடங்களுக்கு முன்னர் டி.எஸ்.சேனாநாயக்க உருவாக்கிய தனித்துவமான இலங்கையை நோக்கி பயணிக்க வேண்டும்.

வடக்கில் தமிழ் மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் குறித்து இந்த விழாவின் பின்னர் ஆராய இருக்கிறோம். நாடாளுமன்றத்தில் இருக்கும் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன். நாம் மீண்டும் நாட்டை ஒன்றிணைக்கவும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் வேண்டும் என்று அவர்களிடம் கோரினேன்.

பல பிரச்சினைகள் குறித்து ஏற்கெனவே ஆராய்ந்துள்ளோம். காணமல் போனோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் பேசியுள்ளோம். என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிய வேண்டும். அதே போன்று உண்மையை கண்டறியும் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவொன்றை உருவாக்க வேண்டும்.

இந்த ஆணைக்குழுவை அமைப்பது குறித்து மூன்று வாரங்களுக்கு முன்னர் இராணுவத்தின் கருத்தை வினவியிருந்தேன். உண்மையை கன்டறிவதை நாமும் விரும்புகிறோம். அதன் மூலம் எம்மீதான குற்றச்சாட்டுகளும் நீங்கும் என அவர்கள் தெரிவித்தார்கள் .எனவே உண்மையை கன்டறியும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை உருவாக்க எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அதே போன்று பயங்கரவாதத்தை தடுக்கும் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை கொண்டு வர இருக்கிறோம். வடக்கிற்கு எதிராக பயன்படுத்துவதற்காக இந்த சட்டத்தை கொண்டு வர தயாராவதாக சிலர் கூறுகின்றனர். நாட்டில் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்தவே இதனை அறிமுகம் செய்ய இருக்கிறோம். கடந்த வருடம் இதனை தெற்கிற்கு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது.

அடுத்து காணிப்பிரச்சினை காணப்படுகிறது. வன்னியில் வனஜீவராசிகள் திணைக்களத்துடன் தொடர்புள்ள காணிப் பிரச்சினை குறித்து ஆராய இருக்கிறோம். அத்தோடு யாழ்ப்பாணத்தில் மீள காணிகளை கையளிப்பது குறித்தும் ஆராயப்படும்.யுத்த காலத்தில் இந்தப் பிரதேசத்தை பாதுகாப்பதற்காக படையினர் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். தற்பொழுது 3000 ஏக்கர் தான் தான் எஞ்சியுள்ளது. அதிலும் மற்றொரு பகுதியை மீள வழங்க இராணுவம் விருப்பம் தெரிவித்துள்ளது. அது குறித்தும் ஆராயப்படும்.

யாழ் ஆயர் அவர்கள் கோரியது போன்று கத்தோலிக்க மற்றும் இந்து ஆலயங்களை மீள நிர்மாணிக்க இருக்கிறோம். 100 வருடங்களுக்கு மேலாக பூஜை வழிபாடுகள் நடைபெற்ற ஆலயங்கள் உள்ளன. புதிதாக ஆரம்பித்தவைகளும் உள்ளன.

அடுத்து 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த உத்தேசித்திருக்கிறோம். அது வடக்குடன் மட்டும் தொடர்புள்ள பிரச்சினையல்ல. தெற்கில் உள்ள முதலமைச்சர்களும் இதனை அமுல்படுத்துமாறு கோருகின்றனர். இதனை கலந்துரையாடி செயற்படுத்த இருக்கிறோம்.இவற்றை எதிர்வரும் ஓரிரு வருடங்களில் கட்டம் கட்டமாக முன்னெடுப்போம்.

வறுமை,பட்டினி,தொழிலின்மை என்பன தமிழ் ,சிங்கள மக்களுக்கு மட்டுப்படவில்லை. அனைவரும் கஷ்டப்படுகின்றனர். அனைவரும் இணைந்து தான் கரைசேர வேண்டும். ” – என்றார்.

Leave a Reply