You are currently viewing சமஷ்டி தீர்வுக்காகவே தமிழர்கள் வாக்களிப்பு!

சமஷ்டி தீர்வுக்காகவே தமிழர்கள் வாக்களிப்பு!

 சமஷ்டி தீர்வுக்காகவே தமிழ் மக்கள் வாக்களிக்கின்றனர். எனவே, அதை நோக்கி பயணிக்க வேண்டும். மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை அவதானமாக கையாள வேண்டும்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரும் பங்காளிக் கட்சியின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

” ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்தப்படவுள்ள பேச்சு குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இரண்டு வகையான நிலைப்பாடுள்ளதே! மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் தொடக்கம் பல விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ரெலோ சொல்கிறது. சம்மந்தன், சுமந்திரன் தரப்பினர் இதைப்பற்றிப் பொருட்படுத்துவதைக் காணவில்லை. உண்மையில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? ” – என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

” பேச்சுகளில் எட்டப்படும் விடயங்கள் மறுக்கப்படும்போதுதான் மத்தியஸ்தத்தின் முக்கியத்துவம் அதிகமாக இருக்கும். அது அழுத்தம் கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால், அப்படியான சூழல் எளிதாக உருவாகாது. 

1983 இலிருந்து இந்தியா இந்தப் பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு வந்துள்ளது. அது வேறு காலகட்டம். வேறு சூழல். இன்று மத்தியஸ்தம் என்பது அனுசரணை என்ற அளவில்தான் இருக்கும். இதுதான் பிற நாடுகளிலும் நடந்துள்ளது. 

அவர்கள் அனுசரணை என்ற அளவில் இரண்டு தரப்பினர்களையும் பேச்சு மேசையில் இருத்துவதற்கு ஏற்பாடு செய்வார்கள். அதைத் தொடர்வதற்கான ஒத்துழைப்புகளைச் செய்வார்கள். அதற்கு மேல் ஆளுமை செலுத்துவதாக இருந்தால் இன்று இந்தியா அல்லது அமெரிக்காதான் வரவேணும். அதை நாம் இப்பொழுது எதிர்பார்க்க முடியாது. அதற்கான சூழலும் இப்போதில்லை.

ஆனாலும் இந்தியா இந்த விடயத்தில் கரிசனையோடிருக்கும் என்றே நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரையில் இந்தப் பேச்சுகள் ஆரம்பமாகி விட்டன. ஆகவே இதை நாம் தொடருவோம். இதில் நாம் நம்பிக்கையோடு செல்கிறோமா இல்லையா என்பதற்கு அப்பால், இன்றைய சூழலை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் எமக்குத் தந்த ஆணையை நாம் மதிக்க வேண்டும். எந்த வழியிலாவது தீர்வைப் பெற வேண்டும் என்றுதான் மக்கள் ஆணை தந்திருக்கிறார்களே தவிர, பேச்சுகளில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அவர்கள் தடுக்கவில்லையே.

கடந்த காலங்களில் பல பேச்சுகள் நடந்திருக்கு. அதில் தோல்விகள் ஏற்பட்டிருக்கு. சிலதில் எங்கள் தரப்பிலும் தவறுகள் நடந்திருக்கு. பலதில் அவர்கள் தரப்புக்குப் பொறுப்புண்டு. அதற்காகப் பேசாமல் விட்டதில்லையே. ஆகவே நாமும் நம்முடைய முயற்சிகளைக் கைவிட முடியாதல்லவா! இன்றைக்கு உள்ள ஒரே விசயம், பேச்சுக்குள்ளால் தீர்வைக் காண்பதுதான். இதை விட வேறு வழியென்ன?

இதற்கு சர்வதேசத்தின் அனுசரணை, ஆதரவு தேவை. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் பேச வேண்டும் என்பதுதான் இந்தியாவின் விருப்பமும் சர்வதேசத்தின் எதிர்பார்ப்புமாகும். நாங்களும் இதைப்பற்றி வெளிநாடுகளின் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் உள்ளோம்.

இதேவேளை சர்வதேச சமூகம் வரவேண்டும். இந்தியா வரவேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து சத்தமிட்டுக் கொண்டிருந்தால் அதைச் சிங்களத் தரப்பு தப்பாகத்தான் பார்க்கும். சிங்கள மக்களும் எதிர்ப்பாகத்தான் பார்ப்பார்கள். அதற்காக இதையெல்லாம் பகிரங்கமாக விவாதிப்பதை விட மிகக் கவனமாக கையாள்வதுதான் நல்லது. அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். ” – எனவும் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.

Leave a Reply