” உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு எடுத்துள்ள முடிவை மாற்றுவதற்கு அரசு எவ்வித தலையீடுகளையும் செய்யாது. இது தொடர்பில் அரச தரப்பில் இருந்து எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, தேர்தல் ஆணைக்குழு தனது கடமையை உரிய வகையில் நிறைவேற்றும் என நம்புகின்றோம்.
இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது உள்ளூராட்சிமன்ற தேர்தல் சம்பந்தமாகவும் கருத்தாடல்கள் இடம்பெற்றன.
அவ்வேளையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
” உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்டுள்ளது. எனினும், தேர்தலை உரிய வகையில் முன்னெடுப்பதற்கு அரசு இடமளிக்குமா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. ஏனெனில் தற்போது நிதி இல்லை என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
எனவே, திட்டமிட்ட அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுமா, 2023 மார்ச் 20 ஆம் திகதிக்குள் புதிய சபைகளை நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நி ஒதுக்கீடு உள்ளிட்ட ஏற்பாடுகளை அரசு செய்து கொடுக்குமா? இதற்கு நேரடி பதில் அவசியம்.” என்று நீதி அமைச்சரிடம் வினவினார்.
இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச,
” எதிரணியின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் சுயாதீன ஆணைக்குழுவான தேர்தல் ஆணைக்குழுவுக்கு உள்ளது. எனவே, இந்த குழுவுக்கு கட்டளையிடுவதற்கோ அல்லது அதன் முடிவுகளை மாற்றியமைப்பதற்கோ அரசு அல்லது நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது.
அத்துடன், தேர்தல் ஆணைக்குழுவின் நடவடிக்கைக்கு தடைகளை ஏற்படுத்தவோ அல்லது ஆணைக்குழுவின் நிகழ்ச்சி நிரலை மாற்றியமைக்கவோ அரசு எவ்வித முடிவையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படும் என நம்புகின்றோம்.” – என்றார்.
-44-
