24 மாநகரசபைகள், 41 நகர சபைகள், 275 பிரதேச சபைகள் உள்ளடங்களாக 340 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி இன்று (04) அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜனவரி 18ஆம் திகதியிலிருந்து 21ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களுக்கு ஜனவரி 20 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை கட்டுப்பணம் செலுத்துவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மொத்தம் 341 உள்ளூராட்சி சபைகள் இருக்கின்றன. இவற்றில் 340 சபைகளுக்கான தேர்தல் 2018 ஆம் பெப்ரவரியில் நடைபெற்றது. முதன்முறையாக கலப்பு முறையின்கீழ் இத்தேர்தல் நடத்தப்பட்டது. உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் இரட்டிப்பாக்கப்பட்டது.
340 சபைகளுக்கு 8ஆயிரத்து 356 உறுப்பினர்களை தெரிவுசெய்ய வேண்டி நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களிலிருந்து 57 ஆயிரத்து 252 பேர் போட்டியிட்டனர்.
இத்தேர்தலில் முதன்முதலில் போட்டியிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (மொட்டு சின்னம்) வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது. 231 சபைகளில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.
ஆளுங்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி 34 சபைகளைக் கைப்பற்றியது. ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவின் சுதந்திரக்கட்சியும் பின்னடைவை சந்தித்தது. வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதிக்கம் தொடர்ந்தது.
2019 ஒக்டோபர் 11 ஆம் திகதி எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் நடைபெற்றது. ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், குறித்த தேர்தலானது அதற்கான சிறு ஒத்திகையாக கருதப்பட்டது. எல்பிட்டிய பிரதேச சபையையும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கைப்பற்றியது.
அந்தவகையில் எல்பிட்டிய பிரதேச சபைதவிர ஏனைய சபைகளுக்கான தேர்தலே நடைபெறவுள்ளது.
2023 மார்ச் 10 ஆம் திகதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தாலும், வேட்புமனு தாக்கலின் பின்னர் தேர்தல் பிற்போடப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு எதிராக மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்தமுறை வெற்றிநடைபோட்ட மொட்டு கட்சி இம்முறை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆட்சி அதிகாரத்தை இழந்த நிலையிலேயே தேர்தலை எதிர்கொள்கின்றது. அதேபோல மொட்டு கூட்டணி பல கூறுகளாக பிளவுபட்டுள்ளன. விமல், டலஸ் மற்றும் மைத்திரி தரப்புகள் வெளியேறியுள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, பொதுத்தேர்தலுக்கு பின்னர் சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும். ஐக்கிய மக்கள் சக்தியும் பிளவுபட்டு நிற்கின்றது.
ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பரந்தப்பட்ட கூட்டணியை அமைத்து களம் காணவுள்ளது.
வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பதற்கான பேச்சுகளையும் ஆரம்பித்துள்ளன. மலையக கட்சிகளும், தேர்தல் குறித்த நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
மக்கள் போராட்டம் இடம்பெற்றுள்ள நிலையில், மக்களுக்கு தமது வாக்குரிமையை பயன்படுத்துவதற்கு தற்போது சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
