தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பது தொடர்பான தமது உத்தேசத் திட்டமான சர்வக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை எதிர்வரும் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை தொடர்பு கொண்டு அத்திகதியில் மேற்படி கூட்டத்தை நடத்துவதற்கான ஒழுங்குகளை செய்யுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று தம்மைச் சந்தித்த சிறுபான்மை இன தரப்பின் கட்சித் தலைவர் ஒருவரிடம் ஜனாதிபதி நேரடியாக இத்தகவலை வெளியிட்டுள்ளார் என தெரியவருகின்றது.
” கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டு அவர்களின் வசதிகளையும் கணக்கெடுத்து வரும் 13 ஆம் திகதி இந்தக் கூட்டத்தை கூட்டுமாறு பிரதமரை கேட்டுள்ளேன். அவர் உரிய ஒழுங்குகளை செய்வார் என்று ஜனாதிபதி என்னிடம் கூறினார்.” என அந்த கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதீட்டுக் கூட்டத்தொடர் முடிந்த பின்னர், அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் சர்வக்கட்சி குழுக் கூட்டம் நடத்தப்படும் என ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
