” உள்ளூராட்சிசபைத் தேர்தலை பிற்போடுவதற்கான சூழ்ச்சித் திட்டங்களின் பின்னணியில் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளரும் செயற்படுகின்றார். தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா சுயாதீன நபர் கிடையாது. அரசியல் பின்புலம் கொண்டவர்.”
இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 2023 மார்ச் 20 ஆம் திகதிக்குள் புதிய நிமல் உள்ளூராட்சி சபைகள் நிறுவப்பட வேண்டும். அப்படியானால் தேர்தலுக்கான வேட்புமனு கோரல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை டிசம்பர் நடுப்பகுதியில் அல்லது ஜனவரி முற்பகுதிக்குள் தேர்தல் ஆணைக்குழு வெளியிட வேண்டும். இது தொடர்பான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உள்ளது.
எனினும், தேர்தல் ஆணைக்குழு சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரியுள்ளது. தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், எதற்காக சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறப்பட வேண்டும். நாளை வேண்டுமானாலும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வர்த்தமானி அறிவித்தலை வெளியிடமுடியும்.
எனினும், சுயாதீன ஆணைக்குழு எனக் கூறப்படும் தேர்தல் ஆணைக்குழு, தேர்தலை பிற்போடுவதற்கான சூழ்ச்சித் திட்டங்களில் ஈடுபடுகின்றது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தமக்கு உள்ள அதிகாரத்தை குறித்த ஆணைக்குழு பயன்படுத்தாமல் இருப்பது ஏன்?
நாடாளுமன்றத்துக்கு வந்து எல்லா விடயங்களுக்கும் பதிலளிக்கும் ஜனாதிபதி, உள்ளூராட்சி தேர்தலை நடத்தும் விடயம் பற்றியும் அறிவிக்க வேண்டும்.
தற்போதைய தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் சுயாதீன நபர் கிடையாது. அவர் எந்த கட்சியில் இருந்தார், அவரின் பின்னணி என்ன என்பது எமக்கு தெரியும். அவர் சூழ்ச்சியில் ஈடுபடுகின்றார். தேர்தல் சட்டம் உள்ள நிலையில், அவர் சட்டமா அதிபரை நாடுவது தேர்தலை பிற்போடுவதற்கான நடவடிக்கையாக உள்ளது.” – என்றார் அநுர.
