அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வுக்கு ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஆதரவு வழங்கும். எமது இந்த நிலைப்பாடு என்றும் மாறாது. எதிர்வரும் சுதந்திர தினத்துக்கு முன்னர் இப்பிரச்சினைக்கு தீர்வை காண்போம். அதற்கு தலைமைத்துவத்தை வழங்குவதற்குகூட நாம் தயார்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் நேற்று அறிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் ஆற்றிய உரைக்கு நேற்று பதிலளித்து உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இந்த அறிவிப்பை விடுத்தார். இது தொடர்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு,
” அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் பாடமெடுத்துள்ளார். வகுப்பறை போன்று ஒவ்வொருவரை எழுப்பி அது பற்றி வினவினார். நாம் 13 பிளஸ், 13 மைனஸ் என ஒருபோதும் கூறியதில்லை. 13 ஐ இல்லாதொழிக்க வேண்டும் என வலியுறுத்தியுதும் கிடையாது.
ஆனால் வெளிநாடு சென்றதும் 13 பிளஸ் எனவும், உள்நாட்டில் 13 மைனஸ் எனக் கூறுவதுமே மொட்டு கட்சி உறுப்பினர்களின் அறிவிப்புகளாக இருந்துவருகின்றன. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக்கொண்டு – தற்போது உள்ளவாறு அதிகாரங்களைப் பகிர்வதற்கு நாம் இணக்கம் தெரிவிக்கின்றோம். இந்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கின்றோம். இந்த நிலைப்பாடு ஒருபோதும் மாறாது. அரசியல் சலுகைகளுக்காக கொள்கைகளை காட்டிக்கொடுக்கமாட்டோம்.
வரவு – செலவுத் திட்டக் கூட்டத்தொடரின் பின்னர், சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டி, வடக்கு, கிழக்கு பிரச்சினை தொடர்பில் இறுதி தீர்வொன்றுக்கு வருவதாக ஜனாதிபதி கூறுகின்றார். அந்தவகையில் பிளவு படாத – பிரிக்க முடியாத நாட்டுக்குள் நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாத்துக்கொண்டு, அதிகாரப்பகிர்வை வழங்குவதற்கு நாம் தயார். சுதந்திரத்துக்கு முன்னர் இப்பிரச்சினையை தீர்ப்போம். அதற்கு முழு ஒத்துழைப்பையும், தலைமைத்துவத்தையும் வழங்குவதற்கு நாம் தயார்.” – என்றார்.
