You are currently viewing அதிகாரப் பகிர்வு குறித்து பேச்சு நடத்த சர்வக்கட்சி கூட்டம்!

அதிகாரப் பகிர்வு குறித்து பேச்சு நடத்த சர்வக்கட்சி கூட்டம்!

அதிகாரப்பகிர்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக டிசம்பர் 11 ஆம் திகதிக்கு பிறகு சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. 

வரவு – செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் ஆரம்பமான பின்னர், ஜனாதிபதியும் கருத்து வெளியிட்டார்.

அதிகாரப்பகிர்வு, பொருளாதாரப் பிரச்சினை, போராட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை மாற்றம் என்பன தொடர்பில் ஜனாதிபதி கருத்துகளை முன்வைத்தார்.

அதிகாரப்பகிர்வு பற்றி பேசிய ஜனாதிபதி, ” எதிரணிகள் ஒன்றுபட்டால் இப்பிரச்சினையை தீர்க்க முடியும். இதற்கு  அவர்களும் (கூட்டமைப்பு) தயார், நானும் தயார்” – எனக் குறிப்பிட்டு லக்‌ஷ்மன் கிரியல்ல, மனோ கணேசன் ஆகியோரிடம் அவர்களின் நிலைப்பாட்டை வினவினார். 

இதற்கு பதிலளித்த எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல,

” அதிகாரப்பகிர்வுக்காக குரல் கொடுப்பவன் நான். எந்த கட்சியில் இருந்தாலும் அதிகாரப்பகிர்வுக்கு ஆதரவு.” எனக் கூறினார்.

” அது எனக்கு தெரியும், ஐக்கிய மக்கள் சக்தியில் எல்லோரும் இதற்கு இணக்கமா, இவ்வாறு இணக்கம் எனில் இன்று  மாலைக்குள் பிரதமருக்கு தெரியப்படுத்துங்கள்.” – என்றார்.

இதன்போது எழுந்த மனோ கணேசன்,

”  ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி அதிகாரப்பகிர்வுக்கு இணக்கம். அதனால்தான் நாம் அங்கு இருக்கின்றோம்.” – எனக் குறிப்பிட்டார். 

” ஜனாதிபதி அவர்களே நீங்கள் தனிமனிதர், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி  அதிகாரப்பகிர்வுக்கு தயாரா,  மஹிந்த ராஜபக்ச 13 பிளஸ் என்றார், முடிந்தால் தற்போது எழுந்து சபைக்கு அதை அறிவிக்க வேண்டும்.” – என்றார். 

அவ்வேளை , “மஹிந்த எழுந்து கூறவும்” என ஜனாதிபதி கூறினார். இதை ஏற்று மஹிந்தவும் எழுந்தார். ” அப்படியானால் ” நாங்கள் 13 பிளஸ்க்கு தயார்.” – என ஜனாதிபதி மீண்டும் அறிவித்தார். இதற்கிடையில் முதலில் பேச்சுக்கு வாருங்கள் என கிரியல்லவை , பிரதமர் அழைத்தார்.  

” ஒற்றையாட்சிக்காக படையினர் உயிர் தியாகம் செய்துள்ளனர். எனவே, ஒற்றையாட்சிக்கு உட்பட்ட வகையிலான நடவடிக்கைக்கே ஆதரவு” என்று நாடாளுமன்ற உறுப்பினர் (விமல் அணி) கெவிந்து குமாரதுங்க தெரிவித்தார்.

இறுதியில் டிசம்பர் 11 ஆம் திகதிக்கு பிறகு இது சம்பந்தமாக கூட்டத்தை கூட்டுவதாக ஜனாதிபதி அறிவித்தார். 

Leave a Reply