தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு திட்டம் தொடர்பில் இனியும் குழுக்களை அமைத்து, அந்த பேச்சு, இந்த பேச்சு என காலத்தை இழுத்தடிக்காமல், ‘பிராந்தியங்களின் ஒன்றியம்’ அல்லது சமஷ்டி அடிப்படையில் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்க வேண்டும்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான த. சித்தார்த்தன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
” நாட்டுக்கு தேவையான கடுமையான தீர்மானங்களை எடுக்காமல், மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைவதற்காக முடிவுகள் எடுக்கப்பட்டமையே இலங்கை பின்நோக்கி நகர்வதற்கு காரணமாக அமைந்தது. இதனை சிங்கப்பூர் பிரதமர் லீ குவான்கூட சுட்டிக்காட்டியிருந்தார். 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டது. அதனால் ஏற்பட்ட அழிவுகள் ஏராளம். போர் உருவாவதற்குகூட இதுவே அடிப்படையாக அமைந்தது. பின்னர் போரை நடத்த அரசு கடன்பட்டது. இன்று நாடும் அழிந்து, பொருளாதாரமும் சீரழிந்துள்ளது.
எனவே, இனப்பிரச்சினைக்கான அரசியல தீர்வு திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சரியானதொரு முடிவை எடுக்க வேண்டும். ஏனெனில் இன்றைய நிலை மாற வேண்டுமானால், நல்லிணக்கம் பிறக்க வேண்டுமானால் அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.
அரசியல் தீர்வு தொடர்பில் கடந்த காலங்களில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதற்காக பல கோடிகள் செலவளிக்கப்பட்டன. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, அரசியலமைப்பு தொடர்பில் நிபுணர் குழுவொன்றை அமைத்தார். அந்த குழுவின் அறிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுதந்திர தினத்துக்கு முன்பு, தீர்வை வழங்குவேன் என ஜனாதிபதி கூறியுள்ளார். அதனை அவர் செய்ய வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்காக குழுக்களை அமைத்து, வட்டமேசை சந்திப்புகளை நடத்தி காலம் கடத்த வேண்டியதில்லை. சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிகாலத்தில் ‘பிராந்தியங்களின் ஒன்றியம்’ என்ற அடிப்படையில் தீர்வு முன்வைக்கப்பட்டது. அதனை எடுக்கலாம். விட்டுக்கொடுப்புகளுடன் நடைமுறைப்படுத்தலாம்.
பிராந்தியங்களின் ஒன்றியம் அல்லது சமஷ்டி அடிப்படையில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு வழங்கப்பட வேண்டும்.” – எனவும் சித்தார்த்தன் கோரிக்கை விடுத்தார்.
