You are currently viewing ‘பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்ககோரி நாளை போராட்டம்’

‘பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்ககோரி நாளை போராட்டம்’

அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் தலைநகர் கொழும்பில் நாளை ஆர்ப்பாட்ட பேரணியும்,  பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது. 

பிற்பகல் 2.30  மணியளவில் மருதானையில் இருந்து ஆரம்பமாகும் பேரணி, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடைந்த பின்னர், அங்கு கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

‘ அரச அடக்குமுறைக்கு எதிரான மக்கள் சக்தி’ எனும் தொனிப்பொருளின்கீழ் முன்னெடுக்கப்படவுள்ள குறித்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, சுதந்திர மக்கள் சபை, 43 ஆம் படையணி உட்பட 20 இற்கும் மேற்பட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன .

100 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களும், வெகுஜன அமைப்புகளும் பேரணியிலும், கூட்டத்திலும் இணையவுள்ளன. அனைத்து பல்கலைக்கழக மாணவ சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

எனினும், குறித்த போராட்டத்துக்கு ஆதரவு வழங்க ஜே.வி.பி. மறுப்பு தெரிவித்துள்ளது. 

அதேவேளை நாட்டில் குழப்ப நிலையை உருவாக்கும் நோக்கிலேயே எதிரணி போராட்டம் நடத்துவதாகவும், இதற்கு மக்கள் ஆதரவு வழங்கக்கூடாது எனவும் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தேசத்துரோகிகள் என ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Leave a Reply