ஈரானில் வாழ்ந்த அழுக்கு மனிதன் (அமா ஹாஜி) குளிப்பதற்கு அஞ்சியதுபோல, தேர்தலை நடத்துவதற்கு இந்த அரசாங்கமும் அஞ்சுகின்றது. எனினும், ஈரான் மக்கள் ஒன்றுகூடி அழுக்கு மனிதனை குளிக்க வைத்ததுபோல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களை அரசாங்கத்துக்கு பிரயோகிக்கும்.”
இவ்வாறு ‘சுதந்திர மக்கள் சபை’யின் தலைவரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய்வதற்கு தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல தேர்தலை முறைமை மாற்றம் குறித்து ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களும் கருத்துகளை வெளியிட்டுவருகின்றனர்.
ஆளுங்கட்சியினரின் இந்த நகர்வானது, உள்ளாட்சிசபைத் தேர்தலை பிற்போடுவதற்கான முயற்சி என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. அத்துடன், தேர்தலை பிற்போடுவதற்கு இடமளிக்கபோவதில்லை எனவும் இடித்துரைத்துள்ளன.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட டலஸ் அழகப்பெரும,
” திட்டமிட்ட அடிப்படையில் உள்ளாட்சி சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதன் ஓர் அங்கமாகவே தெரிவுக்குழு நாடகம் அரங்கேற்றப்படுகின்றது.
ஈரானில் வாழ்ந்த நபரொருவர் 5 சதாப்தங்கள்வரை குளிக்கவில்லை. ஏனெனில் தலையில் தண்ணீர் பட்டால் இறந்துவிடுவோம் என அவர் நம்பியுள்ளார். இறுதியில் உலகம் அவரை, அழுக்கான மனிதன் என அடையாளப்படுத்தியது. அதுபோலவே தேர்தலை நடத்துவதற்கு தற்போதைய அரசாங்கமும் அஞ்சுகின்றது. அதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ” – எனவும் டலஸ் குறிப்பிட்டார்.
