தனிநபர்களை இலக்கு வைத்து முன்வைக்கப்படும் அரசமைப்பு திருத்தங்களுக்கு தமது கட்சி ஆதரவு வழங்காது. மக்களுக்கும் நன்மை பயக்ககூடிய புதியதொரு அரசமைப்பே நாட்டுக்கு தேவை.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போது அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தனிநபர்களை இலக்கு வைத்து கொண்டுவரப்படும் அரசமைப்பு திருத்தங்களுக்கு எதிர்ப்பு என்பதை எமது கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது. எமது நாட்டில் ஒரு மதக்குழு, இனம் மற்றும் நபர்களை இலக்குவைத்தே அரசமைப்பு மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனியும் அத்தகைய நடவடிக்கை ஏற்புடையதாக இருக்காது.
ஒரு நாடாக முன்னோக்கி பயணிக்க வேண்டும். எனவே, தனிநபர் மற்றும் அரசியல் கட்சிகளை இலக்கு வைத்தும், மக்களுக்கு நன்மை பயக்காத விதத்திலும் கொண்டுவரப்படும் அரசமைப்பு திருத்தங்களுக்கு எமது கட்சி இணங்காது. ஜனாதிபதியிடமும் இந்த விடயத்தை எடுத்துரைத்துள்ளோம்.
புதியதொரு அரசமைப்பு இயற்றப்படும் என்ற உறுதிமொழியை நாட்டு மக்களுக்கு எமது கட்சி வழங்கியது. அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்காக, புதிய அரசமைப்புக்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு விசேட நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டது. அனைத்து தரப்புகளினதும் கருத்துகளை உள்வாங்கிய பின்னர், சட்டமூலம் தயாரிக்கப்பட்டு, அது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
ஆகவே, தற்போதுள்ள அரசமைப்பில் திருத்தங்களை செய்துகொண்டிருக்காமல், புதிய அரசமைப்பை நிறைவேற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்திவருகின்றோம். புதிய அரசமைப்புக்கான தேவைப்பாடே உள்ளது.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைத்து, மக்கள் மத்தியில் கருத்தாடலை உருவாக்கி 6 மாதங்களுக்குள் இதற்கான பணியை நிறைவுசெய்ய முடியும்.
சிலருக்கு பஸில் ராஜபக்ச அரசியலில் இருப்பது அச்சுறுத்தலாக உள்ளது. அதனால்தான் இரட்டை குடியுரிமை உடையவர்களுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என கூறுகின்றனர். பஸில் என்ற தனிநபர் இங்கு முக்கியமில்லை. போர் உட்பட பல காரணங்களால் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் உள்ளனர், எனவே, அவ்வாறானவர்கள் நாட்டுக்காக சேவையாற்ற முன்வந்தால் அதற்கான வாய்ப்பு மறுக்கப்படும். இது ஏற்புடைய நடவடிக்கை அல்ல.” – என்றார்.
