You are currently viewing ’22’ ஐ நிறைவேற்ற 150 வாக்குகள் கிட்டும் – நீதி அமைச்சர் நம்பிக்கை

’22’ ஐ நிறைவேற்ற 150 வாக்குகள் கிட்டும் – நீதி அமைச்சர் நம்பிக்கை

அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படும். 150 வாக்குகளைப்பெறுவது சிக்கலுக்குரிய சவாலுக்குரிய விடயமாக அமையாது – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். 

அத்துடன், அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்தை இரண்டரை வருடங்களுக்கு பிறகு ஜனாதிபதியால் கலைக்க முடியும். அந்த ஏற்பாடு 22 இலும் தொடர்கின்றது – எனவும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

நீதி அமைச்சில் நேற்று (18) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். 

” அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. எனவே, சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாமல், நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கின்றோம். 

உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களுக்கு அப்பால் எதிர்க்கட்சித் தலைவரால் முன்வைக்கப்பட்ட இரு திருத்தங்களை உள்வாங்க இணங்கியுள்ளோம். 

அரசியலமைப்பு பேரவைக்கான 3 சிவில் பிரதிநிதிகள் நியமனத்தின்போது பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் இணக்கப்பாட்டுடன், நடு நிலையானவர்களை நியமித்தல், 

பாதுகாப்பு அமைச்சைதவிர ஜனாதிபதி வேறு அமைச்சு பதவிகளை வகிக்காதிருத்தல் என்பனவே அந்த இரு திருத்தங்களாகும். இவற்றைதவிர வேறு திருத்தங்களை உள்வாங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. 

அதேவேளை, ஜனாதிபதியால் நான்கரை வருடங்களுக்கு பிறகே நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என்ற சரத்து 19 ஆவது திருத்தச்சட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டது. எனினும், 20 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக அது இரண்டரை வருடங்களாக குறைக்கப்பட்டது. ‘இரண்டரை வருடங்கள்’ என்ற காலவரையறைக்கு எதிரணி தரப்பில் இருந்தும் எதிர்ப்பு இல்லை. அதனால்தான் 22 இல் அந்த கால எல்லை விவகாரத்தில் கைவைக்கவில்லை.  

அத்துடன், இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு தடை விதிக்கும் யோசனையை மாற்ற அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து அது அமுலுக்கு வரும். இரட்டைக் குடியுரிமையை நீக்குவதற்கு ஒரு சில எம்.பிக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். அதற்கு அரசாங்கம் உடன்படவில்லை. 

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கான பெரும்பான்மை (150 வாக்குகள்) கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனெனில் மக்களும், சிவில் பிரதிநிதிகளுமே 22 ஐ கோருகின்றனர். அதற்கு மக்கள் பிரதிநிதிகள் செவிசாய்க்க வேண்டும். ” – எனவும் அவர் கூறினார்.

Leave a Reply