You are currently viewing 2023 மார்ச் 20 இற்குள் உள்ளாட்சி தேர்தல் அவசியம்!

2023 மார்ச் 20 இற்குள் உள்ளாட்சி தேர்தல் அவசியம்!

2023 மார்ச் 20 ஆம் திகதிக்குள் உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடாகும் – என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் ஜீ. புஞ்சிஹேவா இன்று தெரிவித்தார். 

மாகாணசபைகள் மற்றும் உள்ளாட்சிமன்றங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாகாணசபைகள் மாயமாகிவிட்டன என்று விமர்சனங்கள் எழுகின்றன. அவ்வாறு காணாமல்போகவில்ல, மாகாணசபைகள் செயற்படுகின்றன. நிதிகள் ஒதுக்கப்படுகின்றன. அரச நிறுவனங்கள் செயற்படுகின்றன. ஆளுநரின் கீழ் அதிகாரங்கள் உள்ளன. அவரின்கீழ்தான் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. மக்கள் பிரதிநிதித்துவம் மட்டுமே இல்லை.  எனவே, மக்கள் பிரதிநிதித்துவம் அவசியம் என்பதையே நாமும் வலியுறுத்துகின்றோம். மக்கள் பிரதிநிதிகளின் இடத்தில் அரச அதிகாரிகள் இருந்து செயற்படுவதை நாம் ஏற்கவில்லை.

அதேவேளை, இவ்வருடம் மார்ச்சில் நடைபெறவிருந்த உள்ளாட்சிமன்ற தேர்தல் அடுத்த வருடம் மார்ச்வரை பிற்போடப்பட்டுள்ளது. தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு ஆணைக்குழு எதிர்ப்பு. ஓராண்டுக்கு பிற்போடப்பட்டாலும் 6 மாதங்களில் தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடமுடியும். 

எனினும், தற்போது வாக்காளர் இடாப்பு தொடர்பான பணிகள் இடம்பெறுகின்றன. இந்நிலையில் நாம் தேர்தலை அறிவித்தால் 2021 வாக்காளர் இடாப்பின் பிரகாரம்தான் தேர்தலை நடத்த வேண்டும். இதனால் சுமார் இரண்டரை லட்சம் இளம் வாக்காளர்களுக்கு வாக்குரிமையை பயன்படுத்த முடியாமல் போகும். இதனையும் நாம் ஏற்கவில்லை. எனவே, 2023 மார்ச் 20 ஆம் திகதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” – எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்தார். 

Leave a Reply