காணாமல்போனவர்களின் குடும்பத்தாருக்கு ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படுகின்ற ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவை 2 லட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், ஆளொருவர் காணாமல்போயுள்ளார் என இழப்பீட்டு அலுவலகம் உறுதிப்படுத்துகின்றதெனில், உதவித் தொகையை பெறுவதற்கு ‘காணாமல்போனமைக்கான சான்றிதழ்’ (Certificate of Absence) அவசியமில்லை எனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இதன்போதே நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மேற்படி அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்து, அதற்கு அனுமதி பெற்றுள்ளார்.
” பதிவாளர் நாயகத்தால் வழங்கப்படும் காணாமல் போனமைக்கான சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு காணாமல்போன ஆளொருவரின் நெருங்கிய உறவினருக்கு ஒரு லட்சம் ரூபா தொகையை செலுத்துவதற்காக 2022.03.14 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், காணாமல் போனமைக்கான சான்றிதழை (Certificate of Absence) பெறுவதற்கு நீண்டகாலம் எடுப்பதால் , ஆளொருவர் காணாமல் போயுள்ளமையை இழப்பீட்டு அலுவலகம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பின்,
காணாமல் போனமைக்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையை நீக்குவதற்கும், செலுத்தப்படும் தொகையை 2 லட்சமாக்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.” – என அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
