நாடாளுமன்றத்தில் இன்றும், நாளையும் நடைபெறவிருந்த அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம்மீதான விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது மேற்படி சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30. மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
ஜனாதிபதியின் உரை முடிவடைந்த பின்னர், அவ்வுரை தொடர்பில் சபையில் விவாதமொன்று அவசியம் என மொட்டு கட்சி எம்.பியான மதுர விதானகே கோரிக்கை விடுத்தார். விவாதம் நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என சபை முதல்வரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.
இதன்போது எழுந்த எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல,
” குறித்த விவாதம் இன்று நடத்தப்படுமா” – எனக் கேட்டார்.
” எதிரணி உடன்பட்டால், அதற்கு அரசாங்கமும் தயார். – என சபை முதல்வர் பதிலித்தார்.
” அப்படியானால் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாதா…” என லக்ஷ்மன் கிரயல்ல கேள்வி எழுப்பினார். இதற்கு சபை முதல்வர் நேரடி பதிலை வழங்கவில்லை.
இதன்போது எழுந்த பிரதமர் தினேஷ் குணவர்தன, 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தின் தற்போதைய நிலை பற்றியும், கடந்த கால நகர்வுகள் சம்பந்தமாக விவரித்ததுடன், தாமதத்துக்கு எதிரணிதான் காரணம் என்ற தொனியில் கருத்து வெளியிட்டார்.
இந்த குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்தார்.
” 22 ஆவது திருத்தச்சட்டமூலம் 20 ஆவது திருத்தச்சட்டம்போல் இருக்கக்கூடாது, அது 19 இல் இருந்த நிலைபோல அமைய வேண்டும்.” – வலியுறுத்தினார்.
இதனையடுத்து ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்கள் அது சம்பந்தமாக கருத்து வெளியிட்டனர்.
” இன்று முற்பகல் 11 மணிக்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி முடிவெடுக்கலாம்.” என சபாநாயகர் குறிப்பிட்டார்.
இதன்படி கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னரே, 22 இம்முறை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது எனவும், அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் சபாநாயகர் அறிவித்தார்.
ஒக்டோபர் மாதத்துக்கான இரண்டாம்வார நாடாளுமன்றக் கூட்டத்தொடர் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகி, 21 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
