தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் சாதாரண நடவடிக்கைகளுக்கு எவ்வித தடையும் இல்லை. ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர், மீளாய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.”
இவ்வாறு பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சால் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” எதிர்ப்பை வெளியிடுவதற்கும், போராடுவதற்கும் மக்களுக்கு உள்ள உரிமையை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றது. மதிக்கின்றது. ஆனால் அத்தகைய நடவடிக்கைகளானவை மக்களின் சாதாரண வாழ்க்கைக்கும், பொருளாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துபவையாக அமையக்கூடாது.
போராட்டம் நடத்துவதாக இருந்தால் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்து, அனுமதி பெறப்பட வேண்டும். அந்த நடைமுறை தற்போது பின்பற்றப்படுவதில்லை. எனவே, இனி 6 மணி நேரத்துக்கு முன்னராவது அறிவித்து, உரிய அனுமதியை பெற்றே நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு அனுமதி பெற்றால் எவ்வித பிரச்சினையும் இருக்காது.
சட்டம், ஒழுங்கை மீறும் வகையிலும், பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் தரப்பினருக்கு எதிராகவே சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அத்தகைய நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை. அது நாட்டை அராஜக நிலைக்கே இட்டுச்செல்லும்.
தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டே உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதியில் நாளாந்த நடவடிக்கைக்கு எவ்வித பிரச்சினையும், தடையும் இல்லை. நபர்களுக்கும் தடை இல்லை. குழப்பங்களை ஏற்படுத்துபவர்களுக்கே பிரச்சினை ஏற்படும். எனவே, இது தொடர்பில் குழப்பம் அடைய தேவையில்லை.
ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர், இது தொடர்பில் மீளாய்வு செய்யப்படும். அதன்பின்னரே அப்பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாக வைத்திருப்பதா அல்லது தளர்வு மேற்கொள்வதா என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.” – என்றார்.
