You are currently viewing அரசியல் தீர்வு குறித்த ஜனாதிபதியின் அறிவிப்புக்கு தமிழரசுக்கட்சி வரவேற்பு!

அரசியல் தீர்வு குறித்த ஜனாதிபதியின் அறிவிப்புக்கு தமிழரசுக்கட்சி வரவேற்பு!

இலங்கை அரசு உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறும் என்பதை நாம் நம்பவில்லை. தொடர்ந்தும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம்” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தற்போதைய அணுகுமுறையுடன் செல்வதற்கான அரசின் முன்மொழிவுக்கு தமது கட்சி உடன்படாது எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, ஐ.நாவின் புதிய பிரேரணை வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள், போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத போதிலும் அதில் சாதகமான விடயங்கள் உள்ளன எனவும் மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார். 

“வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அரசியல் தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வழங்கிய உறுதிமொழியை இலங்கைத் தமிழரசுக் கட்சி வரவேற்கின்றது.

அரசியல் தீர்வு தொடர்பில் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகள் ஏற்கனவே ஜனாதிபதி ரணிலிடம் முன்மொழிவுகளைக் கையளித்துள்ளதால், அவை தொடர்பில் கட்சிகளுடன் பேச்சுகளை ஜனாதிபதி ஆரம்பிக்க முடியும்.

ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதில் எப்போதும் அக்கறை கொண்டிருந்தார். நாடாளுமன்றத்தில் ஆற்றிய தனது முதலாவது கொள்ளை விளக்க உரையில் அதிகாரப் பகிர்வை அவர் குறிப்பிட்டுள்ளமை சாதகமான ஒன்று.

ரணில் திறமையானவர் – அனுபவமுள்ளவர் என்ற அடிப்படையில் அவரால் பொருத்தமான அரசியல் தீர்வைக் கொண்டு வருவது சாத்தியமான ஒன்று.

ஜனாதிபதியின் கருத்துக்களுடன் அனைத்துக் கட்சிகளும் உடன்படவில்லை என்றாலும், இலங்கையின் இனப் பிரச்சினைக்கான தீர்வை எட்டுவது தொடர்பான அவரது பரிந்துரைகளுக்குப் பெரும்பான்மையானவர்கள் உடன்படுவார்கள் என நம்புகின்றேன்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் அரசியல் தீர்வு மற்றும் அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்திய இந்தியாவின் நிலைப்பாட்டை வரவேற்கின்றோம்” – எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.