You are currently viewing சமஷ்டி கட்டமைப்பிலான அதிகாரப் பகிர்வே அவசியம்!

சமஷ்டி கட்டமைப்பிலான அதிகாரப் பகிர்வே அவசியம்!

“அரசியல் தீர்வு என்பது ஒரு சமஷ்டி கட்டமைப்பிலான ஓர் அதிகார பகிர்வாக – அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். அத்தகைய அதிகார பகிர்வையே நாம் ஏற்றுக் கொள்வோம். இந்தியாவும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது” – என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் எமது மக்களைப் பாதிக்கும் பல விடயங்கள் தீர்க்கமாக கலந்து ஆலோசிக்கப்பட்டன.

விசேடமாக நிலங்கள் அபகரிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மகாவலி, தொல்லியல் திணைக்களம், வனவிலங்கு பாதுகாப்பு, வனப்பாதுகாப்பு என்று வெவ்வேறு சட்டங்களின் அடிப்படையிலும், வேறு விதமாகவும் நிலங்களுக்கு ஏற்பட இருக்கின்ற ஆபத்துக்களை ஆராய்ந்தோம்.

திருகோணமலையில் தற்போது ஏற்பட்டுள்ள சவால் குறித்துப் பேசினோம். குறிப்பாக திருக்கோணஸ்வரத்துக்குச் சொந்தமான மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து ஆராயப்பட்டது. இது தொடர்பாக கட்சியினால் சில குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்த விடயங்களை உடனடியாக ஆராய்ந்து அடுத்த மத்திய செயற்குழுக் கூட்டத்துக்கு முன்னதாக அனைவருக்கும் அனுப்பி வைக்குமாறு அக்குழுக்கள் பணிக்கப்பட்டுள்ளன.

அதேவேளையில், திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்களது வாழ்விடங்களுக்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான பாதிப்புக்கள் குறித்து திருகோணமலையில் இருந்து கட்சி மாவட்ட மட்ட உறுப்பினர்கள் தமது கருத்துக்களை கூட்ட ஆரம்பத்தில் பகிர்ந்து சென்றிருக்கின்றார்கள்.

இந்த விடயங்கள் சம்பந்தமாக கட்சித் தலைவர், சிரேஷ்ட உபதலைவர், கட்சி செயலாளர் ஆகியோருடன் நானும் சென்று எங்களுடைய பெரும் தலைவர், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இரா.சம்பந்தனைச் சந்தித்து இவற்றைக் கையாள்வது குறித்த உபாயங்கள் தொடர்பாகப் பேசுவது என முடிவு எடுத்துள்ளோம்.

அத்துடன், கட்சி மாநாட்டுக்கு முன்பாக எமது கட்சிக் கிளைகள் புனரமைத்தலில் உள்ள முன்னேற்றங்கள் குறித்து மாவட்டம் மாவட்டமாக ஆராய்ந்தோம்.

கொரோனாத் தொற்று, அதன்பின் எரிபொருள் பிரச்சினை போன்றவை காரணமாக நலிவடைந்து இருந்த இந்தச் செயற்பாடுகள் தற்போது ஓரளவுக்கு முன்னேற்றமடைந்துள்ளன.

ஒக்டோபர் மாத இறுதிக்கு முன்னதாக அனைத்து மாவட்ட கிளைகளையும் புனரமைத்து அதனைத் தொடர்ந்து கட்சி மாநாட்டை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரான கையெழுத்துப் போராட்டம் இடையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஒரு சில மாதங்கள் தடைப்பட்டிருந்தது. அது மீளவும் முடுக்கி விடப்பட்டுள்ளது. ஓர் ஊர்தியுடன் சென்று பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக நடமாடும் செயற்பாடுகளை தற்போது முன்னெடுத்துள்ளோம்.

இலங்கையின் அனைத்து மாவட்டங்களுக்கும் இது கொண்டு செல்லப்படவுள்ளது. வடக்கு, கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியினர் முன்னின்று செய்கிறார்கள். வடக்கு செயற்பாடு நிறைவடைந்துள்ளது.

அடுத்து அநுராதபுரம் நோக்கி நகரவுள்ளோம். தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக அம்பாந்தோட்டைக்குச் செல்லவுள்ளோம்.

இதற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புக்கள் ஆதரவை வழங்கியுள்ளன. எதிர்க்கட்சி வரிசையில் இருக்கின்ற கட்சிகள், 2000 தொழிற்சங்களை கொண்ட ஒன்றியமும், மக்கள் அமைப்புக்களும் என பலர் ஆதரவு வழங்கியுள்ளார்கள்.

தென்னிலங்கை மாவட்டங்களுக்கு நாம் செல்லும் போது அந்த அமைப்புக்கள் முன்னின்று செய்வார்கள். அந்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பது அவர்களதும் கோரிக்கை.

அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். இந்தப் போராட்டத்தின் பலனாக இவை இரண்டையும் அடைவோம் என்ற நம்பிக்கை இருகின்றது.

ஐ.நாவில் இந்தியாவின் கூற்றிலே, இலஙகையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை கொடுப்பதில் இலங்கை அரசு கால இழுத்தடிப்பு ஒன்றைச் செய்து வருகின்றது என்று சொல்லியிருக்கிறார்கள். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது உள்ளடங்கலாக அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.

ஆகவே, 13 ஆம் திருத்தச் சட்டத்துடன் இந்த விடயம் நிறைவுக்கு வருகிறது என அவர்கள் சொல்லவில்லை. எனவே, அந்த நிலைப்பாடு நல்ல நிலைப்பாடு.

முதல் படியாக 13 ஆவது திருத்தத்தை அமுல்படுவத்துவதாக இருந்தாலும் அதனைச் செய்யட்டும். ஆனால், அது தீர்வல்ல.

அரசியல் தீர்வு என்பது ஒரு சமஷ்டிக் கட்டமைப்பிலான ஓர் அதிகார பகிர்வு. அது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். அத்தகைய அதிகாரப் பகிர்வையே ஏற்றுக் கொள்வோம். இந்தியாவும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது.

ஐ.நாவில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படப் போகும் தீர்மானங்கள் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை நான் பேசியுள்ளேன். அதில் என்ன மாற்றம் தேவை எனத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அதனை நிறைவேற்றப் போகின்றவர்கள் இணை அனுசரணை நாடுகள். அவர்கள்தான் இறுதியில் அதில் வேறு எதனையும் சேர்த்துக் கொள்ளலாமா, இதைப் பலப்படுத்தலாமா, அப்படி செய்தால் வாக்குகள் கூடுமா, குறையுமா என்கின்ற கடைசி தீர்மானங்களை எடுப்பார்கள்.

ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள வரைவு ஓரளவு எல்லா விடயங்களையும் அணுகுகின்ற ஒரு வரைவாக உள்ளது. அது இன்னும் பலமூட்டப்பட வேண்டும் எனக் கோரியுள்ளோம்.

எல்லோருடைய கருத்துகளையும் உள்வாங்கியுள்ளார்கள். ஏனைய நாடுகளுடன் பேசி முடிவு எடுப்பார்கள். கூட்டத் தொடரின் இறுதி நாள்களில் வாக்கெடுப்பு நடைபெறும்” – என்றார்.

Leave a Reply