You are currently viewing அதிகாரங்களை பகிர்ந்து அரசியல் தீர்வை காணுமாறு இந்தியா வலியுறுத்து

அதிகாரங்களை பகிர்ந்து அரசியல் தீர்வை காணுமாறு இந்தியா வலியுறுத்து

தேர்தலை முன்கூட்டியே நடத்துவதன் மூலம் அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண சபைகளை செயற்படுத்துவதற்கேதுவாக உடனடி மற்றும் நம்பகமான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்தியா இலங்கையை வலியுறுத்தியுள்ளது.

51ஆவது அமர்வின் போது இலங்கை தொடர்பான ஊடாடும் உரையாடலில் கலந்து கொண்ட ஐக்கிய நாடுகள் மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுக்கான ஜெனீவாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியான தூதுவர் இந்திராமணி பாண்டே, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறும் கடந்த திங்களன்று வலியுறுத்தினார்.

“மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் ஐ.நா சாசனத்தின் கொள்கைகளின்படி வழிநடத்தப்படும் ஆக்கபூர்வமான சர்வதேச உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான மாநிலங்களின் பொறுப்பை இந்தியா எப்போதும் நம்புகிறது.

“இந்த விடயத்தில், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கான தமது அர்ப்பணிப்புகளில் இலங்கை அரசாங்கத்தினால் அளவிடக்கூடிய முன்னேற்றம் இன்மை குறித்து இந்திய பிரதிநிதிகள் கவலையுடன் குறிப்பிட்டுள்ளனர்.

“இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான இந்தியாவின் நிலையான பார்வை, இலங்கைத் தமிழர்களுக்கு நீதி, அமைதி, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யும் வகையில், ஐக்கிய இலங்கையின் கட்டமைப்புக்குள் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதாகும்.

“இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடி கடனினால் இயங்கும் பொருளாதாரத்தின் வரம்புகளையும் அது வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

“இலங்கை குடிமக்களின் ஆற்றலைக் கட்டியெழுப்புவதும் அவர்களின் அதிகாரமளிப்பை நோக்கிச் செயல்படுவதும் இலங்கையின் சிறந்த நலன்களாகும், இதற்காக அடிமட்டத்துக்கு அதிகாரப் பகிர்வு ஒரு முன்நிபந்தனையாகும். இது தொடர்பில், முன்கூட்டியே தேர்தல்களை நடத்துவதன் மூலம் மாகாண சபைகளை செயற்படுத்துவது இலங்கையின் அனைத்து பிரஜைகளும் வளமான எதிர்காலத்துக்கான அவர்களின் அபிலாஷைகளை அடைய உதவும். எனவே இது தொடர்பில் உடனடியாகவும் நம்பகத்தன்மையுடனும் நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையை வலியுறுத்துகிறோம்” என இந்தியப் பிரதிநிதி குறிப்பிட்டார்.