You are currently viewing உள்ளக பொறிமுறை ஊடாகவே தீர்வு – ஜெனிவாவில் இலங்கை திட்டவட்டம்!

உள்ளக பொறிமுறை ஊடாகவே தீர்வு – ஜெனிவாவில் இலங்கை திட்டவட்டம்!

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட 46/1 பிரேரணையுடன் உடன்படி முடியாது என உறுதியாகத் தெரிவித்துள்ள இலங்கை, அரசியலமைப்புக்கு உட்பட்டு, நம்பகமான உண்மை கண்டறியும் உள்நாட்டு பொறிமுறையை நிறுவ முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

46/1 தீர்மானத்தின் உள்ளடக்கம் இலங்கை மக்களின் இறையாண்மையையும் ஐ.நா. சாசனத்தின் கோட்பாடுகளையும் மீறுகிறது என இன்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றிய இலங்கை குழுவின் தலைவர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகரின் அறிக்கை பொருளாதார குற்றங்கள் பற்றி விரிவாகக் குறிப்பிடுவதாகக் கூறிய அலி சப்ரி, அத்தகைய குறிப்பு ஐ.நா. மனித உரிமை பேரவையின் நியாதிக்கத்தை மீறுகிறது எனவும் சுட்டிக்காட்டினார்.

நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள் அர்த்தமுள்ளதாகவும் நிலையானதாகவும் இருக்க வேண்டுமானால் சம்பந்தப்பட்ட நாட்டுடனான ஒத்துழைப்பின் அடிப்படையில் அது அமைய வேண்டும். அந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளுடன் இணங்குவதாக இருக்க வேண்டும். நாட்டின் அடிப்படை சட்ட கட்டமைப்பிற்கு இணங்கும் வகையில் இருக்க வேண்டும் எனவும் அலி சப்ரி வலியுறுத்தினார்.

பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் விடுதலை குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. மனித உரிமைகளை மேலும் மேம்படுத்தும் வகையில் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக மிகவும் விரிவான தேசிய பாதுகாப்பு சட்டத்தை நாங்கள் கொண்டு வருவோம் எனவும் அவர் கூறினார்.