புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் முன்வைத்துள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நீதியமைச்சர் விஜேதாச ராஜபசஷ , முன்னாள் பிரதம நீதியரசர் அசோக் டி சில்வா தலைமையில் மூவர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் டெலிகொன்பரன்ஸ் முறை மூலம் பேச்சுகளை மேற்கொண்ட பின்னரே, அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
கனடாவை சேர்ந்த நீதி மற்றும் சமத்துவத்துவத்துக்கான கனடா அமைப்பினருடனும், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் புலம்பெயர் அமைப்புகளுடனும் நீதி அமைச்சர் பேச்சுகளை நடத்தியிருந்தார்.
தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும், வடக்கு, கிழக்கில் தமிழர்கள் துன்புறுத்தப்படுவதற்கு முடிவு காணவேண்டுமென்ற இரண்டு முக்கிய கோரிக்கைகளை புலம்பெயர் தமிழர் அமைப்புகள் முன்வைத்துள்ளன. சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவை வலுப்படுத்தவேண்டுமெனவும் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
புலம்பெயர் சமூகத்துடன் பேச்சுகளை ஆரம்பித்துள்ளதை உறுதி செய்துள்ள நீதி அமைச்சர் அவர்களுடைய கரிசனைகளை கவனமாக செவிமடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் மூவரடங்கிய குழுவை நியமித்துள்ளதாகவும் அந்த குழுவை வெள்ளிக்கிழமை சந்தித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த விடயத்துக்கு தீர்வை காண்பதற்கான பொறுப்பை அடுத்த தலைமுறைக்கு வழங்க கூடாது துயரங்களுக்கு விரைவில் தீர்வை காண்பதற்கான நாட்டை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளைமேற்கொள்ளவேண்டுமெனவும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
