அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 9 மனுக்கள் மீதான விசாரணை நேற்றுநிறைவடைந்துள்ள நிலையில் அந்தத் தீர்ப்பை விரைவில் சபாநாயகருக்கு அனுப்ப உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மேற்படி மனுக்கள் மீதான விசாரணை நேற்று முன்தினமும் நேற்றும் உச்ச நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதிபதிகளான புவனேக அலுவிஹார மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் மீதான விசாரணை இரண்டாவது நாளாகவும் நேற்று இடம்பெற்றது.
வினிவித்த பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு உள்ளிட்ட ஒன்பது பேர் மேற்படி மனுக்களை தாக்கல் செய்திருந்ததுடன் மனுக்களில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்தார். அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தின் ஊடாக அரசியலமைப்பின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக அந்த மனுக்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, அந்த சட்டமூலத்தின் சரத்துக்களை நிறைவேற்ற வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளாலும் சர்வஜன வாக்கெடுப்பு மூலமும் அதனை நிறைவேற்ற வேண்டும் என்றும் குறித்த மனுக்கள் மூலம் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
