You are currently viewing ‘தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து நல்லிணக்கத்தை வெளிப்படுத்துக’

‘தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து நல்லிணக்கத்தை வெளிப்படுத்துக’

 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள்மீதான தடையை நீக்கியதுபோல், தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவித்து, நல்லிணக்கத்துக்கான சிறந்த ஆரம்பத்தை அரசு வழங்க வேண்டும்.” 

இவ்வாறு குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார். 

தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களால் யாழ் ஊடக அமையத்தில் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு. 

” பத்து வழக்குகளில் 22 பேர், தண்டனை விதிக்கப்பட்டவர்கள், மேன்முறையீடு செய்தவர்கள் என 24 பேருமாக மொத்தம் 46 தமிழ் அரசியல் கைதிகள் காணப்படுகின்றனர். இதில் பெண்  அரசியல் கைதி ஒருவரும் உள்ளடங்குகின்றார். 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஷ்வரனை தொடர்பு கொண்ட போது 46 அரசியல் கைதிகளின் விபரங்களை வழங்கியிருந்தோம். அதன்  தொடர்ச்சியாக வடமாகணத்தினுடைய ஆளுநரையும் தொடர்பு கொண்டு அந்த விவரங்களை அனுப்பி வைத்திருந்தோம். வேறு யாரும் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் அந்தப் பெயர் பட்டியல் கையளிப்பதற்கு தயாராகவே இருக்கின்றோம்.

தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினர் விடுவிக்கப்படுவார்கள் என நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  

இந்த வருடம் ஏப்ரல் மாதம் புதிய மகஸின் சிறைச்சாலைக்கு சென்ற   ஜனாதிபதியின் ஆலோசனை சபையின் தவிசாளர் நீதியரசர் அசோக டீ சில்வா , சொலிசிட்டர் ஜெனரல் சுகத கம்லத் ஆகியோர் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களையும், வழக்குத் தாக்கல் செய்யப்படாதவர்களின் விடுதலை தொடர்பாக ஆராயவே தமக்கு உரித்துள்ளதென அரசியல் கைதிகளிடம் தெரிவித்துள்ளனர்.

தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்று தமிழ் அரசியல் கைதிகளிற்கு தெரியப்படுத்தி இருக்கின்றார்கள். இந்த கூற்று 

எமக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைக்காலத்தில் சமூக வலைத்தளங்களில் புலிகளின் படங்களை பதிவிட்டதற்காக  கைது செய்திருந்தநிலையில் அவர்களை பிணையில் விடுவித்து ,அரசியல் கைதிகளை விடுவிக்கும் மாய தோற்றத்தை ஏற்படுத்த முற்படுகின்றனரோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. அவர்களும் விடுவிக்கப்பட வேண்டும். அதேபோல தமிழ் அரசியல் கைதிகளுக்கும் விடுதலை அவசியம்.  

புலம்பெயர் தேசத்திலுள்ள 361 பேர் இலங்கை அரசாங்கத்தின் கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றனர். அதை செய்ய கூடியதாக இருந்தால் அது நடைமுறைக்கு வருமாக இருந்தால், கண்ணுக்கு முன்னால் இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது? அவர்களை விடுதலை செய்யும் பட்சத்தில் அது நல்லிணக்கத்தின் துவக்க புள்ளியாக இருக்கும்.” – என்றும் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் குறிப்பிட்டார்.