You are currently viewing ‘முழு நாடாளுமன்றையும் அரசாக மாற்றவே நாம் முயற்சிக்கிறோம்’

‘முழு நாடாளுமன்றையும் அரசாக மாற்றவே நாம் முயற்சிக்கிறோம்’

இப்போது நாம் கடினமான காலத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். அதிர்ஷ்டவசமாக, எங்கள் தேவைகளுக்குச் செலுத்த இரண்டு அல்லது மூன்று மில்லியன் டொலரைத் தேட வேண்டியிருந்த காலத்தை கடந்துவிட்டோம். ஆனால் நாம் இன்னும் நெருக்கடியை வெற்றிகொள்ளவில்லை. இறக்குமதியில் தங்கியிருக்கும் பொருளாதாரமாக நாம் தொடர்ந்து பயணிக்க முடியாது. தற்போது நமது வர்த்தக் கையிருப்பு நமக்கு சாதகமாக இல்லை.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. நான் நிதி அமைச்சராக பதவியேற்றதும் அந்நியச் செலாவணியில் இலங்கை என்ற ஒரு நாட்டை விடவும் நான் பணக்காரன் என்பதை உணர்ந்துகொண்டேன். என் வீட்டில் ஆயிரம் டொலர் சேமிப்பில் உள்ளது. அதன்படி, நான்  நாட்டை விட ஆயிரம் மடங்கு பணக்காரன். அதுதான் யதார்த்தம்.

இப்போது நாம் பொருளாதார உறுதிப்பாட்டை உருவாக்க வேண்டும். நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தி வருகின்றோம். பணிக்குழாம் இணக்கப்பாட்டுக்கு இறுதி நிபந்தனைகளைத் தயாரிப்பதற்கு இப்போது இரண்டு குழுக்கள் உள்ளன.

கடன் பொதியொன்றை வழங்கத் திட்டமிட்டு சீனக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் நிதி உதவி வழங்கவும் தயாராகியுள்ளது. இந்த இலக்குகளை எவ்வாறு அடைவது என்பது குறித்து நாம் ஜப்பானுடன் கலந்துரையாடினோம். நாங்கள் ஏற்கனவே இந்தியாவுடன் பேச்சு ஆரம்பித்துள்ளோம்.

நாம் விரைவாக செயற்பட்டால், இந்த நெருக்கடி குறுகிய காலமே நீடிக்கும். ஆனால் நாம் தொடர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தால், அனைவரும் துன்பப்படவேண்டி ஏற்படும். நாம் மீண்டும் பழைய அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது பழைய முறையை கொண்டு வருவதற்காகவா? என்பதுதான் கேள்வி.

முதலில் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவேன். அதன் பின்னர் நாடாளுமன்றத்தை அரசாக மாற்ற நாம் முயற்சிப்போம். துறைசார் மேற்பார்வைக் குழு, தேசிய சபை, மேற்பார்வை நிறைவேற்றுக் குழு ஆகியவற்றில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் பங்கேற்க முடியாது.

குழுக்களுக்கு ஐந்து இளைஞர் பிரதிநிதிகளை அழைக்கலாம். குழுத் தலைவரின் அனுமதியுடன் அவர்கள் கட்சிகளிடம் கேள்வி எழுப்பலாம். உலகில் வேறு எந்த நாட்டிலும் இளைஞர்களுக்கு துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் பங்கேற்க வாய்ப்பை வழங்கியதில்லை. இந்த நாடாளுமன்றத்தின் ஊடாக புதிய முறையை நோக்கி நாம் பயணிக்க முடியும். அதை வேறொரு குழுவிடம் ஒப்படைக்க முடியாது. இதனால் புதிய அரசமைப்பை நோக்கிச் செல்ல முடியும். இனங்களுக்கிடையில் உள்ள பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். 2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்ததால் மீண்டும் நாம் போரில் ஈடுபட வேண்டியதில்லை.

நான்காவது தொழில் புரட்சிக்கு நாம் இப்போது தயாராக வேண்டும். பணம் சம்பாதிப்பதற்கான வழிகளைக் கண்டறிய அதைப் பயன்படுத்தலாம். ஆனால், நமது பொருளாதாரம் முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும். அரச துறை வீழ்ச்சியடையும் போது, கல்வி, சுகாதாரம், வீடு போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நம்மிடம் பணம் இருக்க வேண்டும்.

நமது தேர்தல் முறைகள் குறித்தும் சிந்திக்க வேண்டும். விருப்பு வாக்கு முறையானது வாக்களிப்பு முறைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் நாடாளுமன்றத்தில் புதிய முறையொன்றை கொண்டுவரும் திறன் நமக்கு இருக்க வேண்டும்” – என்றார்.