You are currently viewing ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு பரிந்துரை முன்வைப்பு!

ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு பரிந்துரை முன்வைப்பு!

சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான பரிந்துரையை, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார். 

சட்டமா அதிபரின் ஆலோசனை மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தின் அறிக்கை என்பவற்றை பெற்று, ஆராய்ந்த பின்னரே, – ‘பொதுமன்னிப்புக்கான’ பரிந்துரையை நீதி அமைச்சர் முன்வைத்துள்ளார். 

கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இந்த தகவலை உறுதிப்படுத்தினார். 

” பொதுமன்னிப்பு நடைமுறை உரிய வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே சட்டமா அதிபரிடம் ஆலோசனையும், சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடம் அறிக்கையும் பெறப்பட்டது. இவற்றை ஆராய்ந்த பின்னர் நிபந்தனை ஒன்றின் அடிப்படையிலேயே ஜனாதிபதிக்கு பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டது.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கான தண்டனை, அரசியல் பழிவாங்கல் அல்ல, நீதிமன்றத்தை அவமதித்தமைக்காகவே அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. எனவே, நீதிமன்றம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்காக ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்புகோரி, நீதிமன்றத்துக்கு சத்தியக்கடதாசியொன்றை வழங்க வேண்டும். அதன்பின்னரே அடுத்தக்கட்ட நகர்வு இடம்பெறும். 

பொதுமன்னிப்பு தொடர்பிலும், அதற்கான காலப்பகுதி சம்பந்தமாகவும் ஜனாதிபதியே முடிவெடுப்பார்.” – எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.  

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கால கடூழிய சிறை தண்டனை 2021 ஜனவரி மாதம்  விதிக்கப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காகவே குறித்த தண்டனையை உயர்நீதிமன்றம் வழங்கியது. அதன்பின்னர் ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்புரிமையையும் இழந்தார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். மேலும் பல தரப்புகளும் இந்த கோரிக்கையை விடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் கறுப்பு சால்வை அணிந்தவர்தான் தற்போதைய அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ.  ரஞ்சனின் விடுதலைக்காக ஜெனிவாவரை சென்றவர். 

ஹரின் பெர்ணான்டோ,  ஐக்கிய மக்கள் சக்தியின் இருக்கும்போது, ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு வழங்கினால், அவருக்கு இடமளித்து எம்.பி. பதவியை துறப்பதற்கு தான் தயார் என அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஹரின் சவால் விடுத்திருந்தார். 

அதாவது, ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு வழங்கினால், அவர் நாடாளுமன்றம்வர இடமளித்து தான் பதவி துறப்பார் என்பதே ஹரினின் கூற்றாக இருந்தது. ஆனால் தற்போது அவர் ஆளுங்கட்சி பக்கம். நாடாளுமன்றத்தில் கறுப்பு சால்வையும் அணிவதில்லை. எனவே, பதவி துறப்பாரா என்பது கேள்விக்குறியே!