You are currently viewing மின் கட்டண உயர்வு மக்களின் வாழும் உரிமைக்கு சவால்!

மின் கட்டண உயர்வு மக்களின் வாழும் உரிமைக்கு சவால்!

 மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும்.” – என்று எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். 

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது மின் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல சபையின் கவனத்தை ஈர்த்தார். 

மின்சார கட்டணத்தை 75 வீதத்தால் அதிகரிக்க இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL), இலங்கை மின்சார சபைக்கு அனுமதி நேற்று வழங்கியுள்ளது. 

அதற்கமைய, முதல் 30 அலகுகளுக்கு 264 வீதத்தாலும் 31 முதல் 60 வரையான அலகுகளுக்கு 211 வீதத்தாலும் 61 முதல் 90 வரையான அலகுகளுக்கு 125 வீதத்தாலும் மின் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.

91 முதல் 120 அலகுகள் வரை 89 வீதத்தாலும் 121 முதல் 180 அலகுகள் வரையான மின் பாவனைக்கு 79 வீதத்தாலும் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

” இன்று முதல் கட்டண அதிகரிப்பு அமுல் எனக் கூறப்படுகின்றது, இதனை ஏற்கமுடியாது, விலை அதிகரிப்பு அமுலாக முன்னர் அது தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். 

மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர், இந்நிலையில் அவர்கள் தற்போது மின்சார கதிரையிலும் அமர்த்தப்பட்டுள்ளனர்.” – என கிரியல்ல சுட்டிக்காட்டினார். 

இது தொடர்பில் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.

அதேவேளை, பொருளாதார நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டண உயர்வானது, அவர்களின் வாழும் உரிமையை சவாலுக்குட்படுத்தும் நகர்வாகும் என சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டினர். 

அரசியல்வாதிகள் மற்றும் சில அதிகாரிகளின் முறையற்ற நடவடிக்கையால்தான், இலங்கை மின்சார சபை நஷ்டத்தில் இயங்கிகுகின்றது, எனவே, அதன் சுமையை மக்கள்மீது திணிப்பது ஏற்புடைய நடவடிக்கை அல்ல எனவும் குறிப்பிட்டனர். 

Leave a Reply